நான்கு வரிகளில் ஐந்து பொருள்களை வைத்துப் பாடப்பெற்ற நூல் !
------------------------------------------------------------------------------------
பதினெண் கீழ்க் கணக்கு நூல்களில் ஒன்றான சிறுபஞ்சமூலம், நான்கு அடிகளால் அமைந்த நூறு பாடல்களைக் கொண்டுள்ளது. ”சிறுபஞ்சமூலம்” என்னும் தொடர், ஐந்து சிறிய மூலிகை வேர்கள் என்று பொருள்படும். அவை (01) சிறு வழுதுணை வேர் (02) சிறு நெருஞ்சி
வேர் (03) சிறு மல்லி வேர் (04) பெருமல்லி வேர் (05) கண்டங்கத்தரி வேர் என்பனவாம் !
சிறுபஞ்சமூலமாகிய மூலிகை மருந்து வேர்கள், நமது உடல் நலத்தைப் பேணுவதைப் போல, இந்நூலில் வரும் பாடல்கள் ஒவ்வொன்றிலும் குறிப்பிட்டுள்ள அவ்வைந்து
கருத்துகளும் நமது உயிர் நலம் பேணுவன ஆகும் ! இவ்வொப்புமை கருதியே, இந்நூல் ”சிறுபஞ்சமூலம்” என வழங்கப்பெறுகிறது !
இந்நூலை இயற்றியவர் காரியாசான் என்பவர். இவர் அருகக் கடவுளை வழிபடும்
சைன சமயத்தவர் என்பது, இந்நூலின்கண் அமைந்துள்ள சில
பாடல்களின் கருத்துகள் மூலம் புலனாகிறது !
நான்கு வரிகளில் ஐந்து பொருள்களை அமைத்து பாடும் இவரது திறம்
வியத்தற்குரியது ! திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை முதலிய முந்து நூல்களில் பொதிந்துள்ள கருத்துகளில்
பலவற்றை இந்நூலின்கண் காணலாம் !
சிலந்திப் பூச்சியின் முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளிப்பட்டவுடன்,
அந்தக் குஞ்சுகள் எல்லாம் சேர்ந்து தாய்ப்
பூச்சியைக் கடித்துத் தின்றுவிடுமாம். இங்கு சிலந்தியின் உயிருக்கு அதன் முட்டையே
கூற்றமாக அமைகிறது !
கலைமான், கடமான், காட்டெருமை போன்ற விலங்குகளின் நீண்டு வளர்ந்த கொம்புகள் கானகத்தில்
புதர்களிடையே சிக்கிக் கொள்வதால், அல்லது மரக் கொம்புகளிடையே மாட்டிக்
கொள்வதால், அதிலிருந்து விடுபட முடியாமல், அந்த விலங்குகள் பட்டினி கிடந்தோ அல்லது புலி, சிறுத்தை போன்ற கொன்றுண்ணிகளால் தாக்கப்பட்டோ உயிரைவிட நேர்கிறது;
இங்கு அந்த விலங்குகளின் நீண்ட கொம்புகளே
அவற்றுக்குக் கூற்றம் ஆகிறது !
கவரி மான் தன் வாலில் உள்ள முடிகளை இழந்து விட்டால், அது உயிர் வாழாது; இங்கு, அதன் வால் முடியே அதற்குக் கூற்றம் ஆகிறது ! நீரில் வாழும் நண்டு,
குஞ்சுகளை ஈன்றவுடன், அந்தக் குஞ்சுகளுக்கே இரையாகிப் போகுமாம்; இங்கு நண்டுக்கு அதன் குஞ்சுகளே கூற்றமாகிப் போகிறது !
ஒரு மனிதன், மற்றவர்களைப் பற்றி வறைமுறையின்றி வசை
மொழிகளைக் கூறினால், அந்த வசைமொழிகள் அவன்மீது கடும்
பகையையும் வெறுப்பையும் ஏற்படுத்தி, இறுதியில் அவன்
உயிருக்கே தீங்காக முடிந்து விடுகிறது; இங்கு அவனது
நாவே அவனுக்குக் கூற்றமாக அமைந்து விடுகிறது !
மேற்கண்ட ஐந்து கருத்துகளையும் வெளிப்படுத்தி, காரியாசான் வடித்துள்ள பாடலைப் பாருங்கள் !
-------------------------------------------------------------------------------------
சிலம்பிக்குத் தன்சினை கூற்றம்; நீள்கோடு
விலங்கிற்குக் கூற்றம்; மயிர்தான்
வலம்படா
மாவிற்குக் கூற்றம்; ஞெண்டிற்குத் தன்பார்ப்பு;
நாவிற்கு நன்றல் வசை !
-------------------------------------------------------------------------------------
உலகியல் உண்மைகளை எத்துணை அழுத்தமாக, அழகிய எடுத்துக் காட்டுகளுடன் பாடலாக வடித்துத் தந்துள்ளார்
காரியாசான் !
இன்னொரு பாடலில், இந்த மனித குலம் புறத் தோற்றத்திற்கு,
புற அழகிற்கு அதிக முன்னுரிமை தந்து
செயல்படுவதை இடித்துரைக்கின்றார். ”ஏ ! மாந்தர்களே ! சுருள் சுருளாகத்
தலைமுடி அமைவது அழகு என்று நினைத்துக் கொள்ளாதீர்கள்; அகன்று பரந்த மார்புதான் மிகுந்த அழகு என்று கற்பனை செய்து
கொள்ளாதீர்கள்; கூர்மையாகச் சீவி விடப்பட்டுச் சாயம் பூசிய நகங்கள்,
மிகுந்த அழகை தருகிறது என்று வீணாக ஆணவம்
கொள்ளாதீர்கள்” !
”அணிகலன்கள் பூணப்பட்ட காதுகள்தான் எத்துணை அழகு என்று கண்ணாடி முன்
நின்று மதிமயக்கம் கொள்ளாதீர்கள்; முத்துக்களைப் போல வெண்மையாகத் திகழும்
பச்சரிசிப் பற்கள் அழகோ அழகு என்று ஆரவாரம் செய்யாதீர்கள்; இவையெல்லாம் அழகே அல்ல ! உண்மையான அழகு எது தெரியுமா ? நீங்கள் உதிர்க்கின்ற சொற்களில் உண்மையும் நேர்மையும் இருக்கும் போது,
அச்சொற்களால் ஏற்படுகின்ற அழகு இருக்கிறதே,
அது தான் உண்மையான அழகு ! அதற்கு ஈடும் இணையும்
இந்த உலகத்தில் ஏதுமே இல்லை” !!.
இதோ அந்தப் பாடல் ! பாடலைப் பாருங்கள் !
-------------------------------------------------------------------------------------
மயிர்வனப்பும், கண்கவரு மார்பின் வனப்பும்,
உகிர்வனப்பும், காதின் வனப்பும், செயிர்தீர்ந்த
பல்லின் வனப்பும், வனப்பல்ல; நூற்கியைந்த
சொல்லின் வனப்பே, வனப்பு !
-------------------------------------------------------------------------------------
அரும்பெரும் கருத்துகளை அழகிய பாடல்கள் மூலம் எடுத்துக் கூறும்
சிறுபஞ்சமூலம் பாடல்கள் படிக்குந் தோறும் இன்பம் பயப்பன ! தேடிப் பிடித்தாவது
படியுங்கள் ! படித்துச் சுவையுங்கள் !
----------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை,வேதரெத்தினம்,
(vedarethinam70@gmail.com)
ஆட்சியர்,
தமிழ் இலக்கியம்:
வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு: 2053, விடை (வைகாசி)
22]
{05-06-2022}
----------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக