தமிழ் இலக்கியங்களைப் பற்றிய ஓர் அறிமுகம் !

விரும்பும் பதிவைத் தேடுக !

செவ்வாய், 31 மே, 2022

இலக்கிய அறிமுகம் (31) திணைமாலை நூற்றைம்பது !

இலக்கியங்களின் பால் மனதைச்  செலுத்துவதுசற்று இளைப்பாறுதலாக   அமையும் !

---------------------------------------------------------------------------------------

பதினெண் கீழ்க் கணக்கு நூல்களுள் திணைமாலை நூற்றைம்பதும் ஒன்று ! கீழ்க் கணக்கு வரிசையில் அகப் பொருள் நூல்கள் ஆறு ! அவற்றுள் இரண்டு நூல்கள் திணைஎன்றும், வேறு இரண்டு ஐந்திணைஎன்றும் பெயர் பெற்றுள்ளன !

ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது, கைந்நிலை, கார்நாற்பது  ஆகிய ஆறுமே அகப் பொருள் சார்ந்த கீழ்க் கணக்கு நூல்கள் !

ஐந்திணை ஒழுக்கங்களைக் கோவையாக  அமைத்து, மாலை போலத் தந்துள்ளமையால் திணைமாலைஎன்றும், பாடல் அளவினால், “திணைமாலை நூற்றைம்பதுஎன்றும் இந்நூல் பெயர் பெற்றுள்ளது. கீழ்க் கணக்கில் அமைந்த ஐந்திணை நூல்களில் அளவால் பெரியது இதுவே !

குறிஞ்சி, நெய்தல், பாலை, முல்லை, மருதம் என்னும் வரிசையில் ஐந்திணைகளை இந்நூல் முறைப்படுத்தி உள்ளது! நூற்றைம்பது என்னும் எண் வரையறைக்கு ஏற்ப, திணை ஒவ்வொன்றும் 30 பாடல்களைக் கொண்டிருத்தலே முறையாகும். ஆனால், குறிஞ்சி, நெய்தல், முல்லை ஆகிய மூன்று திணைகளும் ஒவ்வொன்றும் 31 பாடல்களைப் பெற்றுள்ளன !  இதனால், இந்நூலில் நூற்றைம்பது என்னும் அளவினை விஞ்சி நூற்று ஐம்பத்து மூன்று பாடல்கள் இடம் பெற்றுள்ளன !

இந்நூலை இயற்றியவர் கணிமேதாவியார். ஏலாதியை இயற்றியவரும் இவரே ! இந்நூல் கி.பி. 6 –ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது என்பது பல அறிஞர்களின் கருத்து !

இந்நூலில் குறிஞ்சித் திணையில் வரும் முதற் பாடல் ! குறிஞ்சித் திணை என்பது கூடற் கருத்தை உரைப்பதன்றோ ! கூடலின் முதற் படி தலைவனும் தலைவியும் சந்தித்தல் ! இதோ காட்சி தொடர்கிறது !

தலைவியும் அவள் தோழியும் தினைப் புலத்தில் காவல் பணியில் ஈடுபட்டு இருக்கின்றனர். அங்கு தலைவன் வருகிறான். நான்கு விழிகள் மோதிக் கொள்கின்றன ! தலைவன் அவர்களைப் பார்த்து வினவுகிறான் !

ஏ ! பெண்களே !  மணம் மிக்கப் பூங்கொடிகள் படர்ந்திருந்த சந்தன மரங்களை வேருடன் பெயர்த்து எடுத்து அப்புறப் படுத்திவிட்டு, அந்த இடத்தைச் சமப்படுத்தி உழுது, மழையை எதிர்பார்த்து நல்ல நாளில் தினை விதைத்துப் பயிராக்கி, கதிர்கள் முதிர்ந்திருக்கும் இந்நாளில் பறவைகள் கதிர்களைக் கொய்திடா வண்ணம் தினைப் புனத்தில் காவல் காத்து நிற்கும் இளம் பெண்களே ! தாமரை போன்ற ஒளிமிக்க முகமும், நீண்ட கூந்தலும் உடைய  கோதையரே ! நான் எய்த அம்பினை உடலில் தாங்கிக் கொண்டு ஒரு மான் இவ்விடம் ஓடி வந்ததா ? அதை நீங்கள் பார்த்தீர்களா ? “ என்று கேட்கிறான்.

---------------------------------------------------------------------------------------

இதோ அந்தப் பாடல் !

---------------------------------------------------------------------------------------

நறைபடர்  சாந்தம்   அறவெறிந்து,   நாளால்

உறையெதிர்ந்து  வித்திய ஊழேனல் பிறையெதிர்ந்த

தாமரைபோல்  வாள்முகத்துத்  தாழ்குழலீர் !  காணிரோ ?

ஏமரை   போந்தன  ஈண்டு !

---------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

------------------------------------

நறைபடர் = மணம் மிக்க பூங்கொடிகள் படர்ந்துள்ள ; சாந்தம் = சந்தனமரம்; அற எறிந்து = வேருடன் களைந்து அப்புறப்படுத்தி, உறை = மழை; எதிர்ந்து =  எதிர்பார்த்து; நாளால் = நல்ல நாள் பார்த்து; வித்திய = விதைத்து; ஊழ் ஏனல் = விளைந்திருக்கும் இந்த முதிர்ந்த தினைப் புனத்தில் ; பிறை எதிர்ந்த = நிலவை எதிர்த்து இதழ் குவியாத; தாமரை போல் = தாமரை பலர் போல்; வாள் முகத்து = ஒளி பொருந்திய முகமும்; தாழ் குழலீர் =  நீண்ட கூந்தலையும் உடைய பெண்களே; ஏ = அம்பு; மரை = தைத்த மான் ஒன்று; போந்தன= வந்தது; ஈண்டு = இங்கே; காணிரோ = அதைக் கண்டீர்களா ?

----------------------------------------------------------------------------------------

இப்பாடல் சொல்லும் செய்திகள் !

---------------------------------------------------------------------------------------

(01) சந்தன மரங்கள் விலை உயர்ந்தவை ! தினை விதைப்பதற்காகச் சந்தனக்காடுகள் அழிக்கப் பட்டன என்றால், பண்டைத் தமிழகத்தில் சந்தனமரங்கள் அக் குறிஞ்சி நிலத்தில் அளவிறந்த எண்ணிக்கையில் வளர்ந்திருந்தன என்று பொருள் !

(02)  சந்தன மரங்கள் நிறைய இருந்தன என்றால், அந்நாடு செல்வ வளத்தில் சிறந்த ஒன்றாகத்தான் இருந்திருக்க வேண்டும் ! இஃது பண்டைத் தமிழகத்தின் மலை வளத்தைக் காட்டுகிறது !

(03)  தினைப் புனம் பக்கமாக மான் வருகிறது என்றால், மான்கள் வளர்வதற்கான வன வளமும் மிகுதியாக இருந்தன என்பது தெரிகிறது ! இச்செய்தி, அற்றைத் தமிழகம் வனவளம் மிக்கதாக இருந்தது என்பதைக் காட்டுகிறது !

(04)  மழையை எதிர்பார்த்துத் தினை விதைத்தார்கள் என்பதிலிருந்து, மழை வளம் அந்நாளில் குறைவற இருந்தது என்பதும் இப்பாடல் மூலம் புலனாகிறது !

(05)  இளம் பெண்கள் தினைப் புனத்தைக் காவல் காத்தார்கள் என்பதிலிருந்து, பண்டைத் தமிழகத்தில், மகளிர் அச்சமின்றித் தனியாக எங்கும் சென்றுவரும் சூழ்நிலை  இருந்தது என்பது புலனாகிறது !

(06)  தாமரை போன்ற ஒளி பொருந்திய முகம், பெற்ற மகளிர் என்னும் கருத்து, அக்காலத் தமிழகத்தில், பெண்கள் மனக் கவலையின்றி வாழ்ந்தார்கள்; எனவே முக வாட்ட்த்திற்கு வாய்ப்பு  இல்லை. துன்பங்கள் அவர்களது இல்லத்தின் பக்கம் எட்டிக் கூடப் பார்த்ததில்லை என்பதைக் காட்டுகிறது !

(07)  நீண்ட தலைமுடி என்னும் கருத்து, அவர்களது செல்வச் செழுமைக்கும் நலவாழ்வுக்கும் எடுத்துக் காட்டு ! வறுமையும், அதனால் ஏற்படும் உடல் நலிவும் இருந்திருந்தால் மகளிருக்கு நீண்ட கூந்தல் இருக்க வாய்ப்பில்லை !

(08)  மொத்தத்தில், அக்காலத் தமிழகம் வளமாக இருந்தது என்பது திணை மாலை நூற்றைம்பது நமக்கு எடுத்துச் சொல்லும் செய்தியாகும் !

இலக்கியங்களை நுணுகி ஆராய்ந்தால், பண்டைத் தமிழகம் நம் கண்களின் முன்னால் காட்சிகளாய் விரிவதைக் காணலாம் ! பாடுபட்டுத் தேடிப் பணத்தை ஈட்டுகின்ற ஓட்டப் போட்டிகளுக்கு இடையிலும், இலக்கியங்களின் பால் மனதைச் செலுத்துவது, சற்று இளைப்பாறுதலாக  அமையும் !

--------------------------------------------------------------------------------------

ஆக்கம் & இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ் இலக்கியம்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, விடை (வைகாசி) 17]

{31-05-2022}

---------------------------------------------------------------------------------------

இலக்கிய அறிமுகம் (30) திணைமொழி ஐம்பது !

ஒவ்வொரு திணைக்கும் பப்பத்துப் பாடல்களைப் பெற்று, அகத்துறை இலக்கியமாகத் திகழ்வது இந்நூல்!

 ----------------------------------------------------------------------------------

ஐந்திணை ஐம்பதைப் போன்று ஒவ்வொரு திணைக்கும் பப்பத்துப் பாடல்களைப் பெற்றுள்ளது இந் நூல். அந் நூலோடு வேறு பாடு தெரியத் திணைமொழி ஐம்பது என்று பெயர் குறித்தனர் போலும் ! இரண்டு நூல்களும் ஒரே வகையான அமைப்பு உடைமையினால், இவற்றுள் ஏதேனும் ஒன்று மற்றொன்றுக்கு வழிகாட்டியாக இருந்திருக்கலாம் ! எந்த நூல் எதற்கு முன் மாதிரியாய் அமைந்தது என்பது உறுதியாகத் தெரியவில்லை !

இந்நூலில் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் வரிசையில் ஐந்திணைகளும் அமைந்துள்ளன ! இந்த முறையானது, அகப்பொருள் நிகழ்ச்சிகளின் போக்கிற்கு ஒத்ததாக உள்ளது !

------------------------------------------------------------------------------------

புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல்,

ஊடல், அவற்றின் நிமித்தம் என்றுஇவை

தேரும் காலை திணைக்கு உரிபொருளே

------------------------------------------------------------------------------------

என்று தொல்காப்பியர் வகுத்துள்ள முறையை (தொல்:பொருள்:நூற்பா.16) இந்நூல் பெரிதும் பின்பற்றியுள்ளது ! ஆனால்,  தொல்காப்பியர் இரங்கலை அடுத்து ஊடலை வைக்க இந்நூல் ஊடலை அடுத்து இரங்கலை வைத்துள்ளது !

இந்நூலை இயற்றியவர் கண்ணஞ் சேந்தனார். இவர் சாத்தந்தையாரின் புதல்வர். இவரது பெயரை வைத்தே, இவர் வைணவச் சமயத்தினர் எனத் தெளியலாம். கார் நாற்பதின் ஆசிரியர் கண்ணங் கூத்தனார் இவரது தமையனாக இருக்கக் கூடும் !

இந்நூலில் குறிஞ்சித் திணையில் வரும் ஒரு பாடற் காட்சி ! தலைவியைக் காணவரும் தலைவன் அவளை காணாமல் தோழியிடம் சென்று உசாவுகிறான் ! தோழியோ அவனுக்கு நேரடியாக விடை கூறவில்லை !

எம் தலைவியின் மனம் கவர்ந்த மன்னவனே ! தலைவனே ! உன் நாட்டில் மலையில் விளையும் சந்தன மரங்கள் முதிர்ந்து உலர்ந்தவுடன், அவற்றை வெட்டித் தீயிலிட்டு எரிப்பதால், மலையெங்கும் சந்தன மணம் கமழ்கிறது !

இந்த நறும் புகை வானளாவச் சென்று அங்குள்ள வானவர்களை மகிழ்விப்பதால், அவர்கள் மனம் கனிந்து உன் நாட்டில் மழையைப் பொழிவிக்கின்றனர் !  இதனால் உன் நாடு மலைவளமும் மழை வளமும் மிக்க செழுமையான நாடாகத் திகழ்கிறது !

இத்தகைய வளமான நாட்டின் தலைவனே ! நீ தலைவியைக் காண்பதற்குப்  மாலையும் இரவும்  மயங்குகின்ற இவ் வேளையில் வரல் வேண்டா ! நீ வருகின்ற வழியெங்கும் யானைக் கூட்டங்கள் திரிகின்றன. உனைக் கண்டு அந்த யானைகள் சினம் கொண்டால் உன் நிலைமை என்னவாகும் ?” என்கிறாள் !

தலைவனை நோக்கித் தோழி கூறுகின்ற இந்த அச்சமூட்டும் உரையின் உட்பொருள், “ தலைவா ! இப்படி மாலை மயங்கும் நேரத்தில், ஊரார் கண்களில் படாமல், நீ ஒளிந்து ஒளிந்து வரவேண்டுமா ? தலைவியைத் திருமணம் செய்துகொண்டு அவளை உன் நாட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டியது தானே ? ”

------------------------------------------------------------------------------------

இதோ அந்தப் பாடல் !

------------------------------------------------------------------------------------

புகழ்மிகு  சாந்துஎறிந்து  புல்லெரி ஊட்டி.

புகைகொடுக்கப்  பெற்ற  புலவோர்  துகள்பொழியும்,

வான்உயர்  வெற்ப  இரவில்  வரல்வேண்டா !

யானை உடைய சுரம் !

------------------------------------------------------------------------------------

இதைப் போன்ற சுவையான காட்சிகள் அமைந்த பாடல்கள் பல உள்ளன ! பொருள் புரிந்து படித்தால் இலக்கிய இன்பம் நுகரலாம் ! முயன்றால் முடியாதது எதுவுமில்லை ! முயன்று பாருங்கள் நண்பர்களே !

------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ் இலக்கியம்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, விடை (வைகாசி) 17]

{31-05-2022}

-----------------------------------------------------------------------------------

திங்கள், 30 மே, 2022

இலக்கிய அறிமுகம் (29) ஐந்திணை எழுபது !

திணை ஒன்றுக்கு 14 வீதம் ஐந்து திணைகளுக்கும் மொத்தம் எழுபது  பாடல்கள் கொண்டது இந்நூல் !

 ------------------------------------------------------------------------------------

ஐந்திணைகளில் ஒவ்வொன்றிற்கும்  பதினான்கு பாடல்களைக் கொண்டு. எழுபது பாடல்களில் இந்நூல் அமைந்து இருப்பதால், இதற்கு ஐந்திணை எழுபது எனப் பெயர் வழங்கலாயிற்று. குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் என்னும் வரிசையில் பாடல் திணைகள் அமைந்துள்ளன !

இந்நூலை இயற்றியவர் மூவாதியார் ! இவரைச் சிலர் சமண மதம் சார்ந்தவர் என்று கூறுவர். ஆனால், அதற்குத் தக்க சான்றுகள் ஏதுமில்லை. இவரைப் பற்றிய வேறு செய்திகள் ஏதும்  கிடைக்கவில்லை !

செய்யுள் அடிகள் மற்றும் அவற்றில் வரும் சொற்களின் ஒற்றுமையாலும், வேறு சில குறிப்புகளாலும், இவர் ஐந்திணை ஐம்பதை அடியொற்றிப் பாடல்களை அமைத்து இருக்கிறாரோ  என்று சிலருக்கு ஐயம் தோன்றக் கூடும் !

இந்நூலில் உள்ள எழுபது பாடல்களில் முல்லைத் திணையில் வரும் 25, 26 -ஆவது பாடல்கள் முற்றிலும் சிதைந்து விட்டன. அதுபோன்றே நெய்தல் திணையில் வரும் 69, 70 -ஆவது பாடல்களும் கிடைக்கப் பெறவில்லை !

இந்நூல், செம்பாகமான தெள்ளிய நடையை மேற்கொண்டுள்ளது. அக்காலப் பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் முதலியனவும் இந்நூலால் புலனாகின்றன !

இந்நூலில், குறிஞ்சித் திணையில் ஒரு பாடல்; தலைவனைப் பற்றித் தலைவி தோழியிடம் எடுத்துரைக்கிறாள். என் அருமைத் தோழியே ! நான் ஒன்று சொல்கிறேன் ! கேள் ! நற்பண்புகள் நிறைந்த சான்றோர்களின் நட்பினை அடைதல்  நமக்குக் கிடைக்கும் பெரும்பேறு ஆகும் ! அந்த நட்பானது நமக்குச் சிறந்த  துணையாகி, மிகுந்த வலிமையையும் தரும் ! அது மட்டுமன்றி, அளவுகடந்த நன்மைகளையும் நமக்குத் தரும் !

அதுபோல, நீர் வளமும் நிலவளமும் நிறைந்து, எங்கெங்கு காணினும் பூஞ்சோலைகளாகத் திகழும் மலை நாட்டுக்குரிய என் தலைவனின் நட்பானது எவ்வித குறைபாடுகளுக்கும் இடமின்றி மிகுந்த இன்பத்தை மட்டுமே  தருவதாக அமையும் என்று என் நெஞ்சம்  சொல்கிறதடி என் இனிய தோழி !என்று தலைவன் மீது மிகுந்த நம்பிக்கையை வெளிப் படுத்துகிறாள்!

-----------------------------------------------------------------------------------

இதோ அந்தப் பாடல் !

-----------------------------------------------------------------------------------

சான்றவர்   கேண்மை   சிதைவின்றாய்   ஊன்றி,

வலியாகி  பின்னும்  பயக்கும்;  மெலிவுஇல்,

கயம்திகழ்  சோலை   மலைநாடன்  கேண்மை

நயம்திகழும் என்னும்,  என்னெஞ்சு !

------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

------------------------------------------------------------------------------------

சான்றவர் = சான்றோர்கள்; கேண்மை = நட்பு; சிதைவின்றாய் = சிதைவு படாமல்; ஊன்றி = நிலைத்து நின்று; வலியாகி = வலிமை பெற்று; பின்னும் பயக்கும் = அதன் பின்னும் நன்மைகளைத் தரும்; மெலிவு இல் = வற்றாத; கயம் = நீர்நிலைகள் (குளங்கள்); திகழ் = நிறைந்து காணப்படும்; சோலை = பூஞ்சோலைகள்; மலைநாடன் = இந்த மலை நாட்டின் தலைவன்; கேண்மை = நட்பாகிய பழக்கம்; நயம் திகழும் = இன்பங்களைத் தருவதாக; திகழும் = விளங்கும்; என்னும் = என்று எனக்குச் சொல்கிறது; என் நெஞ்சு = எனது நெஞ்சம்.

------------------------------------------------------------------------------------

இயற்கை வளத்தைப் படம் பிடித்துக் காட்டும் இத்தகைய பாடல்கள் அடங்கிய ஐந்திணை எழுபது படிக்கும் தோறும் இன்பம் பயப்பதாகும் !

------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ் இலக்கியம்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, விடை (வைகாசி) 16]

{30-05-2022}

--------------------------------------------------------------------------------------

இலக்கிய அறிமுகம் (28) ஐந்திணை ஐம்பது !

திணையொன்றுக்கு பத்து வீதம் ஐம்பது பாடல்களைக் கொண்ட  நூல் !

 ------------------------------------------------------------------------------------

இது முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்ற வரிசையில் பப்பத்துப் பாடல்களைப் பெற்றுள்ள நூலாதனின், இதனை ஐந்திணை ஐம்பது என்று குறிப்பிடுகின்றனர் . கி.பி.6 – ஆம் நூற்றாண்டில் இந்நூல் தோன்றியிருக்கலாம் என்பது பல அறிஞர்களின் கருத்து !

இந்நூற் பாடல்கள் சிறந்த நடை உடையனவாயும், கருத்து வளம் செறிந்தனவாயும் உள்ளன.  இந்நூலுக்கு உரிய பாயிரம், “ஐந்திணை ஐம்பதும் ஆர்வத்தின் ஓதாதார், செந்தமிழ் சேராதவர்”, என்று கூறுகின்றது. எனவே செந்தமிழ்ப் புலமைக்கு இந்நூற் பயிற்சி மிகவும் அகத்தியம் என்பது தெளிவு !

இதன் ஆசிரியர் மாறன் பொறையனார். இப் பெயரில் மாறன் என்பது பாண்டியனைக் குறிப்பதாயும், பொறையன் என்பது சேரனைக் குறிப்பதாயும் உள்ளன. எனவே, இவர் இந்த இரு பேரரசரோடும் தொடர்புடையராய், இவர்களுக்கு நட்பினராய் இருத்தல் கூடும் !

இந்நூலின் முதற் செய்யுளில் உவமையாக மாயோன், முருகன், சிவன் மூவரையும் குறித்துள்ளார். இதனால் இவரை வைதிக சமயத்தவர் என்று கருதற்கு இடமுண்டு !

திருக்குறள் முதலிய கீழ்க் கணக்கு நூல்களிற் பயின்றுள்ள சொற் பொருள் மரபுகள் சில இந் நூலகத்தும் உள்ளன. கொற்சேரி நுண் துளைத் துன்னூசி விற்பாரின்...என்னும் 21 –ஆவது பாடலின் கருத்து  கொற்சேரித் துன்னூசி விற்பவர் இல்என்னும் பழமொழி நானூற்றில் வரும் 50 – ஆவது பாடல் கருத்தையும் வரிகளையும் ஒத்து இருக்கின்றன !

------------------------------------------------------------------------------------

இந்நூலில் நெய்தல் திணையில் வரும் பாடற் காட்சி ஒன்றைப் பாருங்கள் ! நெய்தல் திணை என்பது இரங்கல் உணர்வை உரிப் பொருளாகக் கொண்டதன்றோ ? இரங்கல் உணர்வை அழகாக வெளிப்படுத்தும் பாடலைப் பாருங்கள் !

------------------------------------------------------------------------------------

தலைவியைப் பிரிந்து, தலைவன் தன் நாட்டிற்குச் சென்றுவிட்டான். விரைவில் திரும்பி வருகிறேன் என்று கூறிச் சென்றவன் இன்னும் வரவில்லை. தலைவனின் நினைவால், தலைவி வாடுகிறாள்; உணர்ச்சிப் பிழம்பாகத் திகழ்கிறாள் !

தன் தலைவன் ஏறிச் சென்ற தேரின் காலடித் தடத்தை (தேர்க் காலடித் தடம் = தேர்ச் சக்கரம் பதித்துச் சென்ற தடம்) கண்டேனும் ஆறுதல் பெற விரும்புகிறாள். எனவே, தேர் சென்ற வழித்தடத்தில்  அங்குமிங்கும் ஊர்ந்து  திரிகின்ற நண்டினைப் பார்த்து, “ ஏ ! நண்டே ! வளைந்த கால்களை  உடைய நண்டே ! என்றும் ஆரவாரம் அடங்காத, அலைகளை  உடைய  கடற்கரை ஓரம் அமைந்துள்ளது எம் காதலனின் நாடு ! விரைவில் திரும்பி வருகிறேன் என்று கூறிச் சென்றவன் இன்னும் வந்து சேரவில்லை !

அவன் நினைவால் என் உள்ளம் வாடுகிறது ! என் அழகிய உடல் பசலை பூத்துப் பொலிவிழந்து விட்டது !  அவன் ஏறிச் சென்ற தேரின் காலடித் தடங்களைக் கண்ணாரக் கண்டாலாவது எனக்கு ஆறுதலாக இருக்கும் ! எனவே உன்னை யான் ஒன்று வேண்டுகிறேன் ! அவன் ஏறிச் சென்ற தேரின் காலடித் தடங்களை அழித்து விடாதே ! தேர்க்கால் தடம் பதிந்த மணல் வெளியில்  அங்குமிங்கும் நீ நடந்து, அத் தடங்களை அழித்து விடாதே !என்று வேண்டுகிறாள். என்னே புலவரின் கற்பனைத் திறம் !

------------------------------------------------------------------------------------

இதோ அந்தப் பாடல் !

------------------------------------------------------------------------------------

கொடுந்தாள்  அலவ !  குறையாம்  இரப்போம் !

ஒடுங்கா  ஒலிகடற்  சேர்ப்பன்  நெடுந்தேர்

கடந்த  வழியைஎம்  கண்ணாரக்  காண,

நடந்து சிதையாதி, நீ !

-----------------------------------------------------------------------------------

அருஞ்சொற் பொருள்:

-----------------------------------------------------------------------------------

கொடுந்தாள் = வளைந்த கால்; அலவன் = நண்டு; குறை = எம் மனக் குறையை;  இரப்போம் = உன்னிடம் சொல்லி வேண்டிக் கேட்கிறேன்; ஒடுங்கா ஒலி கடல் = எப்பொழுதும் ஆரவாரம் அடங்காத அலைகளை உடைய கடல்;  சேர்ப்பன் = நெய்தல் நிலத் தலைவனாகிய எம் காதலன்; சிதையாதி = சிதைத்து அழித்துவிடாதே !

-------------------------------------------------------------------------------------

இது போன்ற பாடல்களைக் கொண்ட இந்நூல், மாந்த இனத்தின் அக உணர்வுகளை அழகுபடச்  சித்திரிக்கிறது !

-------------------------------------------------------------------------------------

அடுத்து ஒரு பாடல் ! பாலைத் திணையைப் பின்னணியாகக் கொண்ட பாடல் ! வாழ்ந்த சூழலின் வசதிகளையும், பசுமையான நினைவுகளையும் விடுத்துக் காதலனுடன் வறண்ட பாலை நிலப் பகுதி ஊடாகச் செல்கிறாள் தலைவி ! பாலை நிலத்திற்கே இயல்பான கடுமை வாட்டும்; எனினும் காதல் வயப்பட்ட உள்ளங்களுக்கே இயல்பான விட்டுக் கொடுப்புகள், அவர்களை மேலும் நெருக்கமாக்கும். இக்கருத்தை விளக்கும் அழகிய பாடலைப் பாருங்கள் !

------------------------------------------------------------------------------------

சுனைவாய்ச்  சிறுநீரை,  எய்தாது  என்றெண்ணி,

பிணைமான்  இனிதுண்ண  வேண்டி  கலைமாதன்

கள்ளத்தின்  ஊச்சும்   சுரம்என்பர்,  காதலர்

உள்ளம்  படர்ந்த  நெறி !

-----------------------------------------------------------------------------------

ஆணும் பெண்ணுமான இரு மான்கள் (கலைமான், பிணைமான்) பாலை நிலத்தில் அரிதாகக் காணப்படும் நீர்ச் சுனை ஒன்றில் நீர் அருந்தச் செல்கின்றன ! ஆனால் அதில் இருக்கும் நீரோ மிகக்குறைவு ! இரண்டு மான்களுக்கும் பொதுமானதாக இல்லை ! தான் அருந்தாவிட்டால், பெண் மானும் அருந்தாது என்று ஆண் மானுக்குத் தெரியும் ! எனவே பெண்மான்  அருந்தட்டும் எனத் தான் அருந்துவது போல பாசாங்கு செய்கிறதாம் ஆண்மான் !  இதுவே காதல் உள்ளங்களின் ஒழுக்கம் என்கிறார் புலவர் !

------------------------------------------------------------------------------------

அருஞ்சொற் பொருள்:

-----------------------------------------------------------------------------------

சுனை வாய் = சுனையில் உள்ள; சிறு நீரை = மிகக் குறைவாக இருக்கும் நீரை; எய்தாது = பெண்மான் அருந்தாது; என்றெண்னி = என்று கருதி; பிணைமான் = பெண்மான்; இனிதுண்ண வேண்டி = அருந்தட்டும் என்று விரும்பி; கலைமா தன் = ஆண்மான் தன்னுடைய; கள்ளத்தின் = பாசாங்கு செய்தல்; ஊச்சும் = உறிஞ்சுதல்; சுரம் = பாலைநிலம்; நெறி = ஒழுக்கம்

------------------------------------------------------------------------------------

இத்தகைய கருத்துச் செழுமை வாய்ந்த பாடல்களை படித்து, உள்வாங்கி ஒழுகுகின்ற மக்கள் நற்பேறு பெற்றவர்கள் என்றால் அது மிகையில்லை !