தமிழ் இலக்கியங்களைப் பற்றிய ஓர் அறிமுகம் !

விரும்பும் பதிவைத் தேடுக !

திங்கள், 28 மார்ச், 2022

இலக்கிய அறிமுகம் (03) பொருநராற்றுப்படை !

கரிகால் பெருவளத்தானின் பெருமைகள் பற்றிப் பேசும் இலக்கியம் !

 

பத்துப் பாட்டு நூல்களுள் இரண்டாவதாக அமைந்திருப்பது பொருநராற்றுப் படை.  இதனை இயற்றியவர் முடத்தாமக் கண்ணியார்  என்னும் பெரும் புலவர் !

 

பொருநர் என்பவர் ஏர்க்களம் (வேளாண்மை) பற்றிப் பாடுவோர், போர்க்களம் பற்றிப் பாடுவோர், பரணி (பரணி என்பது இலக்கியங்களில் ஒரு வகை) பாடுவோர் எனப் பலவகைப்படுவர் !

 

இவர்களுள், போர்க்களம் பற்றிப் பாடும் ஒருவன், சங்க காலச் சோழ மன்னர்களுள் தலைமணியாக விளங்கிய கரிகால் பெருவளத்தானிடம் சென்று பாடிப் பரிசில் பெற்று ஊருக்குத் திரும்புகையில், வேறொரு பொருநன் எதிரில் வருகிறான் !

 

அவனிடம், கரிகால் பெருவளத்தானைப்  பற்றி எடுத்துரைத்து, அம்  மாமன்னனிடம் சென்று பாடிப் பரிசில் பெற்று வரச் சொல்லி, அப்பொருநனை ஆற்றுப்படுத்துவதாக (வழிப்படுத்தி அனுப்புவதாக) அமைந்துள்ளது பொருநராற்றுப் படை என்னும் இந்நூல் !

 

அகவற்பாவினால் வடிவமைக்கப்பட்டுள்ள இவ்விலக்கியம், 248  அடிகளை உடையது. இந்நூலில், கரிகாலனின் விருந்தோம்பும் சிறப்பு, பொருநனுக்கு உணவு கொடுத்து ஓம்பிய முறை,, அரசவைக்குப் பொருநன் செல்லுதல், மன்னனின் சிறப்பைப் பாடுதல், ஊருக்குச் செல்ல பொருநன் விரும்புதல், அரசன் பிரிய மனமின்றி பரிசில் கொடுத்து அனுப்புதல், கரிகால் வளவனது சிறப்புகள், வெண்ணிப் போர் வெற்றி, மன்னனின் கொடைச் சிறப்பு ஆகியவை பற்றி விரிவாகப் பாடியுள்ளார் புலவர் !

 

சோழநாட்டின் வளமும் வனப்பும், நில மயக்கமும் நல்லாட்சியும், காவிரியின் வெள்ளச் சிறப்பு, காவிரி நாட்டு வயல் வளம் ஆகியவை பற்றியும் வயணமாக எடுத்துரைக்கிறார் முடத்தாமக் கண்ணியார் !

 

பல புதிய தமிழ்ச் சொற்களை நமக்கு அளித்துள்ள பொருநராற்றுப் படை, ஆங்கிலச் சொற்களுக்கு நேர்ப் பொருள் அல்லது இணைப் பொருள் அல்லது புனைப் பொருள் தரும் அரிய சொற்களை ஆங்காங்கே பாடல் வரிகளில் பொதித்து வைத்துள்ளது. அவற்றுள் சிலவற்றைப் பார்ப்போமா !

 

-----------------------------------------------------------------------------

 

MEALS.............................................= அவிழ்ப்பதம் (பொரு.112)

SKYJACKERS.................................= ஆறலைக் கள்வர் (பொரு.21)

ASHTAMI (அஷ்டமி)...................= எண்மதி (பொரு.11)

WHAT ARE ALL I KNOW..............= என்னறி அளவை (பொரு.128)

WHAT ARE ALL HE KNOWS.......= தன்னறி அளவை (பொரு.127)

HAIR CUTTER................................= மயிர் குறை கருவி (பொரு.29)

GRANARY BAG..............................= மூடை (பொரு.245)

GOGGLES........................................= கண்கூடு (பொரு.15)

TROUBLE SHOOTING...................= இடும்பைத் தீர்வு (பொரு.67)

BOILED FOOD................................= வேவை (பொரு.104)

SUDDENLY.......................................= கதுமென (பொரு.241)

 

-----------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ் இலக்கியம்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு:2053, மீனம் (பங்குனி) 14]

{28-03-2-22}

-------------------------------------------------------------------------------

சனி, 26 மார்ச், 2022

இலக்கிய அறிமுகம் (02) திருமுருகாற்றுப்படை !

அடியார் ஒருவரை   முருகனிடம் ஆற்றுப்படுத்துவது போல்   பாடப் பெற்ற   இலக்கியம்  !

 

இதனை இயற்றியவர் நக்கீரர். இந்நூல் 317 அடிகளைக் கொண்ட பாடலால் ஆனது. முருகக் கடவுளை அடைந்து வீடு பேறு பெற்ற அடியவன் ஒருவன், வீடு பேற்றை விரும்பிய மற்றொருவனை அக்கடவுளிடம் ஆற்றுப்படுத்தும் முறையில் (அதாவது வழி வகைகளைச் சொல்லி அனுப்பும் வகையில்) பாடப்பட்டது திருமுருகாற்றுப்படை ! [திரு + முருகன் + ஆற்றுப்படை].

 

முருகன், அமர்ந்திருக்கின்ற திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்), திருவாவினன்குடி (பழனி), திருவேரகம் (சுவாமிமலை), திருத்தணிகை (குன்றுதோராடல்), பழமுதிர் சோலை (அழகர்கோயில்) என்னும் ஆறு படைவீடுகளின் சிறப்பியல்புகளை இப்பாட்டிற் காணலாம் !

 

முருகப் பெருமானின் பொலிவு, உயரிய ஒழுக்கம், அக்காலத்து ஆடை அணி வகைகள், வேலனது தோற்றம், குறமகளிர் விழாக் கொண்டாடும் முறை முதலியன, திருமுருகாற்றுப் படையில் விளக்கப்பட்டுள்ளன !

 

திருப்பரங்குன்றத்தின் சிறப்பை 77 வரிகளில் சொல்கிறார் நக்கீரர். சூரனை வென்ற திருச்சீரலைவாயின் பெருமைகளை 48 வரிகளில் பாடியுள்ள அவர், திருவாவினன்குடியின் புகழை 51 வரிகளிலும், திருவேரகம் என்னும் சுவாமிமலையின் சீர்மையை 13 வரிகளிலும், திருத்தணிகையின் அருமை பெருமைகளை 28 வரிகளிலும், பழமுதிர் சோலையின் பாங்கினை 100 வரிகளிலும் அழகுற எடுத்துரைக்கிறார் !

 

முருகனை மையப்படுத்தி, அவனது அறுபடை வீடுகளின் சிறப்பைப் பற்றி அகவற்பாவால் சரம் தொடுத்துப் வயணமாக படைத்திருக்கும் நக்கீரரின் திருமுருகாற்றுப் படையில் அழகிய தமிழ்ச் சொற்கள் பல ஆங்காங்கே பாடல் முழுதும் பரவிக் கிடக்கின்றன !

 

இச்சொற்களுக்கு நேர்ப் பொருள் அல்லது இணைப் பொருள் அல்லது புனைப் பொருள் தரும் ஆங்கிலச் சொற்கள் கண்டறியப்பட்டு, உங்கள் பார்வைக்கு வைக்கபடுகின்றன. அவற்றுள் ஒரு சிலவற்றை மட்டும் காண்போமா !

-----------------------------------------------------------------------------

 

BAZAAR....................= நியமம் (முரு.70)

STREET....................= மறுகு (முரு.71)

STRENGTH...............= மொய்ம்பு (முரு.81)

HIDE..........................= உரிவை (உரித்த தோல்) (முரு129)

FLOOD LIGHT.........= அவிரொளி (முரு.144)

STAR.........................= மீன் (முரு.169)

BOTTLE....................= புட்டில் (முரு.191)

BEAR (கரடி)..........= உளியம் (முரு.313)

ORCHESTRA...........= பல்லியம் (முரு.119)

HEAVY DUTY..........= மதவலி (முரு.275)

SQUARE...................= சதுக்கம் (முரு.225)

TUBE.........................= தூம்பு (முரு.148)

MOTTO........................= பொன்னுரை (முரு.145)

 

-----------------------------------------------------------------------------

 ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedareththinam70@gmail.com)

ஆட்சியர்,

"தமிழ் இலக்கியம்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு:2053, மீனம் (பங்குனி) 12]

{26- 03-2022}

 ------------------------------------------------------------------------------

வெள்ளி, 25 மார்ச், 2022

இலக்கிய அறிமுகம் (01) பத்துப்பாட்டு!

தொகை நூல்களுள் முதன்மையாக வைத்து எண்ணப்படுவது பத்துப்பாட்டு ! 

 

பழந்தமிழ் நூல்களைப் பொதுவாக, ‘பத்துப் பாட்டு’, ‘எட்டுத் தொகை’, ‘பதினெண் கீழக்கணக்குஎன்று பாகுபடுத்தி உரைப்பது உரையாசிரியர்கள் காலந்தொட்டுப் பயின்று வரும் ஒரு மரபாகும். இம்முறை வைப்பில் பத்துப் பாட்டுசங்க காலத் தொகை நூல்களுள் முதன்மையாக வைத்து எண்ணப்படுகிறது !

 

இது, பத்துப் பெரிய அகவற் பாடல்களைக் கொண்ட தொகுதி. பத்துப் பாட்டுத் தொகுதியில் அடங்கியுள்ள நூல்களை நினைவில் வைத்துக் கொள்ள வாய்ப்பாகப் பழைய பாடல் ஒன்று உள்ளது. அப்பாடல் வருமாறு :-

 

----------------------------------------------------------------------------

முருகு, பொருநாறு, பாணிரண்டு, முல்லை,

பெருகு வளமதுரைக் காஞ்சி, மருவினிய

கோல நெடுநல்வாடை, கோல்குறிஞ்சி, பட்டினப்

பாலை, கடாத்தொடும் பத்து.

----------------------------------------------------------------------------

 

திருமுருகாற்றுப் படை, பொருநராற்றுப் படை, சிறுபாணாற்றுப் படை, பெரும்பாணாற்றுப் படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் ஆகிய இப்பத்து நூல்களுமே பத்துப் பாட்டுஎன்று வழங்கப் பெறுபவை !

 

பத்துப் பாட்டு நூல்களைத் தொகுத்தவர், தொகுப்பித்தவர் பெயர்கள் தெரியவில்லை. திருமுருகாற்றுப் படை, பொருநராற்றுப் படை, சிறுபாணாற்றுப் படை, பெரும்பாணாற்றுப் படை, மலைபடுகடாம் ஆகிய ஐந்தும் ஆற்றுப்படை நூல்கள் !

 

திருமுருகாற்றுப் படைக்கு புலவர் ஆற்றுப்படை’, என்ற பெயரும் உண்டு. மலைபடுகடாம் கூத்தர் ஆற்றுப்படைஎனவும் வழங்கும். முல்லைப்பாட்டு’, ‘குறிஞ்சிப்பாட்டு’, ’பட்டினப்பாலைமூன்றும் அகத்திணை ஒழுக்கம் பற்றியவை!

 

நெடுநல்வாடைஅகப் பொருள் செய்தி வாய்ந்ததாயினும், பாண்டியனது அடையாளப் பூவைக் கூறினமையால், இது புறத் திணை நூலாகக் கருதப்படுகிறது. மதுரைக் காஞ்சிவீடுபேறு நிமித்தமான செய்திகளைக் கூறுவதால், இதையும் புறத்திணை நூலாக வகைப்படுத்திக் கூறுவர் உரையாசிரியர்கள் !

 

பத்துப் பாட்டு நூல்களுள் மிகச் சிறியது முல்லைப்பாட்டு;  இதில் 103 அடிகள் உள்ளன. மிகப் பெரிய பாடல் மதுரைக் காஞ்சி; இதில் 782 அடிகள் உள்ளன !

 

பண்டைத் தமிழின் அழகையும் பெருமையையும், தொகை நூல்களை ஊன்றிப் படித்து மகிழ்வோமாக ! பழந்தமிழ்க் கருவூலங்களான இவற்றைத் தமிழ் பணி மன்ற நண்பர்கள் விருப்புடன் ஏற்று, போற்றிப் படித்துப் பயன் அடைவார்களாக!

 

சில ஆங்கிலச் சொற்களுக்கு நேர்ப் பொருள் அல்லது இணைப் பொருள் அல்லது புனைப் பொருள் தரும் அழகிய தமிழ்ச் சொற்கள் பத்துப் பாட்டு நூல்களில் பரந்து காணப்படுகின்றன. அவற்றுள் சிவற்றை மட்டும் இங்குக் காண்போம் !

 

-----------------------------------------------------------------------------

 

ORCHESTRA...............= பல்லியம் (பா.வரி.119. திருமுரு)

HEAVY DUTY...............= மதவலி (பா.வரி.232. திருமுரு)

HIGHWAY ROBBERS..= ஆறலைக் கள்வர் (பா.வரி.21.பொருநர்

FUND...........................= நிதியம் (பா.வரி.249.சிறுபாண்)

HEIR (வாரிசு)............= பிறங்கடை (பா.வரி.30,பெரும்பாண்)

BACK YARD.................= படப்பை (பா.வரி.401.பெரும்பாண்)

SENIOR CITIZEN........= மூதாளர் (பா.வரி.54.முல்லைப்பாட்டு)

V.I.P..............................= விழுமியர் (பா.வரி.200.மதுரைக்காஞ்சி)

MECHANIC..................= கம்மியர் (பா.வரி.57.நெடுநல்வாடை)

BUNGALOW................= வளமனை (பா.வரி.223.குறிஞ்சிப்பாட்டு)

KITCHEN......................= அட்டில் (பா.வரி.43.பட்டினப்பாலை)

SONS...........................= மகார் (பா.வரி.236.மலைபடுகடாம்)

 

----------------------------------------------------------------------------

 

குறுக்க விளக்கம்:

திருமுரு = திருமுருகாற்றுப்படை;

பொருநர் = பொருநராற்றுப்படை

சிறுபாண் = சிறுபாணாற்றுப்படை

பெரும்பாண் = பெரும்பாணாற்றுப்படை


----------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

"தமிழ் இலக்கியம்” வலைப்பூ

[திருவள்ளுவராண்டு:2053, மீனம் (பங்குனி) 11]

{25-03-2022)

--------------------------------------------------------------------------------