பல மணிகள் கோத்த காஞ்சி அணி போல முது மொழிகள் பலகோத்த நூல்
முதுமொழிக் காஞ்சி !
-----------------------------------------------------------------------------------
முதுமொழி என்பது பழமொழி என்னும் சொற் பொருளோடு தொடர்புடையது ! மூதுரை,
முதுசொல் என்பனவும் இப்பொருள் தருவன. பொதுவாக,
“காஞ்சி” என்பது பல்வேறு நிலையாமைகளைக் குறிக்கும் ஒரு துறை !. அஃதன்றி மகளிர்
இடையில் அணியும் ஒருவகை அணிகலக் கோவையையும் குறிக்கும். உலகியல் உண்மைகளைத்
தெள்ளத் தெளிந்த புலவர் பெருமகனார் மதுரைக் கூடலூர் கிழார் எடுத்து இயம்புவதே இம்
முதுமொழிக் காஞ்சி !
பல மணிகள் கோத்த காஞ்சி அணி போல முதுமொழிகள் பலகோத்த நூல் முதுமொழிக்
காஞ்சி எனப் பெயர் பெற்றது என்றும் சொல்கின்றனர் ! எனவே இந்நூலை ஒரு அறிவுரைக்
கோவை என்றே சொல்லலாம் ! இந்நூல் கி.பி. 4 – ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பது அறிஞர்கள் கருத்து !
பதினெண்கீழ்க் கணக்கு நூல்களில் இதுவும் ஒன்று. இந் நூலை ஆக்கியவர்
மதுரைக் கூடலூர் கிழார் ! கூடலூர் இவர் பிறந்த ஊராயும், மதுரை பின்பு புகுந்து வாழ்ந்த
ஊராயும் இருத்தல் கூடும். கிழார் என்னும் குறிப்பு, இவர் வேளாண் மரபினர் என்பதை உணர்த்துகிறது !
இந்த நூலுள் பத்துப் பத்துக்களும், ஒவ்வொரு பத்திலும் பத்து முதுமொழிகளும் உள்ளன. ஒவ்வொரு செய்யுளும் “ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்....” என்றே தொடங்குவதால் இந்நூல் குறள் வெண் செந்துறை என்னும் வகையைச்
சார்ந்தது ஆகும் !
எல்லா அடிகளிலும் பயின்று வரும் சொற் குறிப்பைக் கொண்டு ஒவ்வொன்றும் ”சிறந்த பத்து”, ”அறிவு பத்து”, ”பழியாப் பத்து”, ”துவ்வாப் பத்து”, ”அல்ல பத்து”, ”இல்லைப் பத்து”, ”பொய்ப் பத்து”, ”எளிய பத்து”, ”நல்கூர்ந்த பத்து”, ”தண்டாப் பத்து” என்று பெயர் பெற்றுள்ளது !
எது சிறந்தது என்பதைச் ”சிறந்த பத்து”
பகுதியில் புலவர் எவ்வாறு எடுத்துரைக்கின்றார்
பாருங்கள் !
ஓயாது ஆரவாரித்து ஒலி
எழுப்பிக் கொண்டிருக்கும் கடல்கள் சூழ்ந்த இந்த உலகத்தில்,
(01) ஒரு மனிதன் நிறைந்த கல்வி பெறுவதை விடச் சிறந்தது
உயர்ந்த ஒழுக்கம் உடைமை !
(02) கற்றறிந்த அறிஞர்கள் நம்மீது அன்பு
செலுத்துவதை விடச் சிறந்தது அவர்கள் நம்
அறிவுடைமையைப் பார்த்து அச்சப்படுதல் !
(03) கல்வியிற் துறைபோகிய மேதை என்று
பிறரால் புகழப்படுவதை விடச் சிறந்தது, கற்றதை மறவாது
ஒழுகல்!
(04) வாரிக் கொடுக்கும் வள்ளல் என்று பெயர்
எடுப்பதை விடச் சிறந்தது உண்மை பேசும் உயர்ந்த மனிதனாகத் திகழ்தல் !
(05) என்றும் இளமைத் தோற்றத்துடன் இருக்க
விரும்புவதை விடச் சிறந்தது நோயற்ற உடலுடன் வாழ்தல் !
(06) அழகாக இருப்பதை விடச் சிறந்தது பழிக்கு
இடம் தரலாகாது என்று அஞ்சும் நாணம் உடைமை
!
(07) நல்ல குலத்திற் பிறந்தவளாக
இருப்பதைவிடச் சிறந்தது கற்பிற் சிறந்த காரிகையாக விளங்குதல் !
(08) கல்வி கற்பதை விடச் சிறந்தது கற்றறிந்த
சான்றோரைப் பணிகின்ற பண்பு உடையவனாகத் திகழ்தல் !
(09) பகைவரை வலிமை இழக்கச் செய்து வெல்ல
நினைப்பதை விடச் சிறந்தது தன்னை வலிமைப் படுத்திக் கொள்ளல் !
(10) இளமைக் காலத்தில் செல்வத்தை மேலும்
மேலும் ஈட்டிப் பெருகச் செய்தலை விடச்
சிறந்தது இருக்கின்ற செல்வத்தை முதுமைக் காலத்தில் வற்றிப் போகாமல் பாதுகாத்தல் !
------------------------------------------------------------------------------------
ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்,
ஓதலிற் சிறந்தன்று ஒழுக்கம் உடைமை !
காதலிற் சிறந்தன்று கண்ணஞ்சப் படுதல் !
மேதையிற் சிறந்தன்று கற்றது மறவாமை !
வண்மையிற் சிறந்தன்று வாய்மை உடைமை !
இளமையிற் சிறந்தன்று மெய்பிணி இன்மை !
நலனுடை மையின் நாணுச் சிறந்தன்று !
குலனுடை மையின் கற்புச் சிறந்தன்று !
கற்றலின் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று !
செற்றாரைச் செறுத்தலின் தற்செய்கை சிறந்தன்று !
முற்பெரு கலின்பின் சிறுகாமை சிறந்தன்று !
---------------------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள்:
---------------------------------------------------------------------------------
ஆர்கலி = ஆரவாரித்து ஒலிக்கின்ற கடல்; சிறந்தன்று = சிறந்தது; கண்ணஞ்சல் =
அஞ்சுதல்; வண்மை = கொடைத் தன்மை; நலன் = அழகு; நாணு = நாணம்; செற்றாரை = பகைவரை; செறுத்தலின் = வெல்லுதல்; தற்செய்கை = தன்னை வலிமைப் படுத்திக் கொள்ளல்.
----------------------------------------------------------------------------------
பத்து முதுமொழிகள் கொண்ட ஒரு
பாடல் தான் இங்கு விளக்கப் பட்டுள்ளது.
இன்னும் தொண்ணூறு முது மொழிகள் கொண்ட ஒன்பது பாடல்கள் உள்ளன. கருத்தாழம் மிக்க
முதுமொழிக் காஞ்சியை, எப்படியாகிலும் தேடிப் பிடித்துப்
படித்துப் பயனடையுங்கள் !
------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்.
(vedarethinam70@gmail.com)
ஆட்சியர்,
“தமிழ் இலக்கியம்”
வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு: 2053, விடை (வைகாசி)
23]
{06-06-2022}
------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக