தமிழ் இலக்கியங்களைப் பற்றிய ஓர் அறிமுகம் !

விரும்பும் பதிவைத் தேடுக !

சனி, 4 ஜூன், 2022

இலக்கிய அறிமுகம் (35) பழமொழி நானூறு !

ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ஒரு பழமொழியை வைத்துப் பாடியுள்ளார் முன்றுறை அரையனார் !

-----------------------------------------------------------------------------------

 

பழமொழி நானூறு அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள் வணக்கத்தையும் சேர்த்து நாலடியால் அமைந்த நானூற்றொரு (401) பாடல்களைக் கொண்ட நீதிநூலாகும். சங்கம் மருவிய காலமான கி.பி.ஐந்தாம் நூற்றாண்டு வாக்கிலான  தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் இதுவும் ஒன்று !

 

இது முன்றுறை அரையனார் என்னும் சமண முனிவரால் இயற்றப்பட்டது. இதன் ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் ஒரு பழமொழி சார்ந்த நீதி கூறப்படுவதால் பழமொழி நானூறு என்ற பெயர் பெற்றுள்ளது. இதில் கூறப்பட்டுள்ள பழ மொழிகள் இலக்கியம் சார்ந்தவையாகும். சங்க காலத்தினைப் பற்றி இந்நூல் அதிக தகவல்களைத் தருகின்றது !

 

முன்றுரை அரையனார் சமண சமயத்தைச் சார்ந்த அரசராக இருக்கக் கூடும் என்பது அவர் பெயரில் உள்ள அரையர் என்னும் சொல் காட்டுகிறது என்பது சிலரது கருத்து ! அரையர் என்று பட்டப் பெயர் பெற்ற ஒரு குடியைச் சார்ந்தவராகவும் இருக்கலாம் என்பது சில ஆய்வாளர்களின் கருத்து !

 

ஆசிரியர், தாம் அவ்வப்போது ஆய்ந்து உணர்ந்த பொருள்களைப் பழமொழியோடு பொருத்திப் பாடி வந்திருக்க வேண்டும். இதனாலேயே, இந்நூற் பாடல்கள் எல்லாம் தனித் தனியே பொருள் முடிந்து நிற்கும் முத்தகச் செய்யுள்களாக அமைந்து தனித் தனிக்  கருத்தை வெளியிடுகின்றன !

 

இந்நூலில் பயின்று வரும் பழமொழிகளில் பல, எதுகை, மோனைகளுக்கு ஏற்ப மாறுதல்கள் பெற்றிருக்கின்றன. சிற்சில பழமொழிகள் இக்கால வழக்கிலில்லை. ஒருசில பழமொழிகளில் அமைந்துள்ள பழமொழிகளின் வடிவம் விளங்கவில்லை. எனினும் ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு பழமொழியைப் பாடலின் இறுதியில் வைத்துப் பாடியுள்ள வெண்பாக்கள் அத்துணையும் மெத்த ஒளிரும் முத்துகள் !

 

பாம்பின் கால் பாம்பு அறியும்என்று ஒரு பழமொழி தமிழ் மக்களிடையே புழக்கத்தில் உள்ளது. பாம்புக்குக் கால்கள் உண்டா, என்று ஐயம் எழுவது இயல்பே ! கால்கள் இல்லையேல் அவை எப்படி நடமாடுகின்றன, என்று வேறு சிலருக்கும் ஐயம் எழுவதும் இயற்கையே ! இதுபற்றி வேறொரு சமயத்தில் பார்க்கலாம் !

 

இந்நூலில் உள்ள ஒரு பாடலில் பாம்பறியும், பாம்பின கால்என்று ஒரு வரி வருகிறது. இதன் பொருள் என்ன ? பாம்பு காடுகளிலும் புதர்களிலும் ஊர்ந்து சென்று தனக்கான உணவைத் தேடுகிறது. உணவுக்காக நெடுந்தொலைவு அலைந்து திரியும் பாம்பு, பின்னர் தன் இருப்பிடத்தை எவ்வாறு அடைய முடிகிறது. அதற்குத் தன் இருப்பிடத்திற்குச் செல்ல எவ்வாறு வழி தெரிகிறது ?

 

அதுதான் பாம்பு இனத்திற்கே உரித்தான தனித் திறமை ! ( பாம்பின கால் = பாம்பினம் தன் உறைவிடம் திரும்பும் வழி ) எத்துணை தொலைவு சென்றாலும், தன் இருப்பிடத்திற்குத் திரும்பி வரும் வழியை  அறியும் திறன் பாம்புக்கு உண்டு ! அதற்கு எவ்வாறு வழி தெரிகிறது என்பதை நாம் உணர முடியாது ? பாம்பு சென்று வரும் வழியைப் பாம்பு மட்டுமே அறிய முடியும் !

 

அதுபோலவே, அறிவிற் சிறந்த பெருமக்களைக் காண்கையில் அவர்களைத் தன் கூர்த்த மதியினால் அடையாளம் கண்டுகொள்ளும் திறமை அறிவாளிகளுக்கு மட்டுமே  உண்டு; கூர்த்த மதியில்லாப் பொதுமக்களுக்கு இஃது இயலாது ! இதை விவரிக்கிறார் முன்றுரை அரையனார் ஒரு பாடலில் ! இதோ அந்தப் பாடல் !

 

------------------------------------------------------------------------------------

 

புலம்  மிக்கவரைப்  புலமை  தெளிதல்

புலம்  மிக்கவர்க்கே புலனாம் நலம்மிக்க

பூம்புனல் ஊர!பொது மக்கட்கு ஆகாதே !

பாம்பறியும் பாம்பின கால் !

 

------------------------------------------------------------------------------------

அருஞ்சொற் பொருள்:

------------------------------------

 

பூம்புனல் ஊர = நீர் வளம் மிக்க ஊரில் வாழும் ஏ ! மனிதனே ! ; புலம் மிக்கவரை = அறிவிற் சிறந்த பெரியோரை;  புலமை தெளிதல் = காணும் நோக்கிலேயே இவர் அறிவாளி என்று கண்டு கொள்ளும் திறமை;  புலம் மிக்கவர்க்கே = இன்னொரு அறிவாளிக்கே; புலனாம் = இயலும் செயலாகும்; (எப்படியெனில்) பாம்பின கால் =  காடுகளில் சென்று பாம்புகள் வரும் வழியை; பாம்பறியும் = அப்பாம்புகளே அறியும், (வேறு யாருக்கும் அவ்வழி புலப்படாது.)

 

------------------------------------------------------------------------------------

 

இன்னொரு பாடலில்  இன்னொரு அரிய கருத்தை எடுத்துரைக்கிறார் முன்றுரை அரையனார். நுண்மாண் நுழைபுலம் மிக்க வியத்தகு திறமைகள் படைத்த ஒருவர் உங்கள் ஊரில் இருக்கிறார். அவர் மீது உங்கள் நண்பருக்குச்  சற்றுப் பொறாமை ! அவரது புகழ் ஊர் மக்களிடையே பரவாமல் மறைக்க வேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார் ! அதற்காக அவர் என்ன செய்தார் தெரியுமா ?

 

அவர் மீது நீர்ப்பாசி போன்ற பொல்லாத சொற்களைப் புனைந்துரைக்கிறார்.  பொல்லாத சொற்கள் அவரது புகழை மறைத்துவிடுமா என்ன ? ஒளி வெள்ளத்தைச் சீறிப் பாயச் செய்து வானில் உலா வரும் ஆதவனை ஒற்றை கையினால் மறைத்துவிட முயுமோ ? என்ன அரிய உவமை ! இதோ அந்தப் பாடல்:-

 

-----------------------------------------------------------------------------------

 

பரந்த  திறலாரைப்   பாசிமேல்  இட்டுக்

கரந்து  மறைத்தலும்  ஆகுமோ ?    நிரந்தெழுந்து

வேயின்  திரண்டதோள்  வேற்கண்ணாய் ! விண்ணியங்கும்,

ஞாயிற்றைக்  கைம்மறைப்பார்  இல் !

 

-------------------------------------------------------------------------------------

 

இது போன்ற அருமையான பழமொழிகளை உள்ளடக்கி 400 வெண்பாக்களை நமக்கு அளித்திருக்கிறார் முன்றுரை அரையனார் ! அனைத்தும் கருத்துக் கருவூலங்கள் ! படித்து மகிழ்வோம் ! பயன் பெறுவோம் !

 

------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ் இலக்கியம்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, விடை (வைகாசி) 21]

{04-06-2022}

-------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக