தமிழ் இலக்கியங்களைப் பற்றிய ஓர் அறிமுகம் !

விரும்பும் பதிவைத் தேடுக !

ஞாயிறு, 1 மே, 2022

இலக்கிய அறிமுகம் (13) நற்றிணை !

நற்றிணையில் காணப்படும் உவமைகள் பொருத்தமும் நயமும் உடையவை !

-------------------------------------------------------------------------------------

எட்டுத் தொகையுள் ஒன்றாகிய நற்றிணை 09 முதல் 12 அடி  வரையிலுள்ள 400 அகவற் பாக்களின் தொகுதி. குறுந்தொகை, நெடுந்தொகை (அகநானூறு) இரண்டிற்கும் இடைப்பட்டு, அளவான அடிகளை உடைமையினால் இது நற்றிணைஎன வழங்கப் பெற்றது போலும் !

 

ஏறத்தாழ 175 புலவர் பெருமக்கள் பாடியுள்ள பாடல்களின் தொகுப்பே இந்நூல். அகப்பொருள் செய்திகள், தெளிவாகவும், அழகாகவும் இந்நூலில் எடுத்து உரைக்கப்பட்டுள்ளன. இதன்கண் காணப்படும் உவமைகள் பொருத்தமும் நயமும் உடையவை !

 

உவமைக்கு ஒரு எடுத்துக் காட்டு: தலைவன் ஒருவன் பொருள் தேடுதற்குத் தன் மனைவியை விட்டுப் பிரிந்தான். நடுக் காட்டிற்குச் சென்றவுடன், அவன் மனம், மனைவியை நினைத்து வீட்டிற்குச் செல்லக் கருதியது. அவனது அறிவு பொருள் தேடிக் கொண்டே செல்லுதல் வேண்டும் என்றது !

 

இவ்வாறு மனமும் அறிவும் மாறுபட்ட நிலையில், அவன் உடல் மெலிந்தது. அந்நிலையில் தேய்ந்த புரியினை உடைய  பழைய கயிற்றின் இரண்டு பக்கத்தினையும் இரண்டு யானைகள் பற்றி  இழுத்தால், அக்கயிறு எளிதில் அறுந்துவிடுதல் போல, என் உடம்பும், விரைவில் அழிந்துவிடும் போலும்!என்று தலைவன் வருந்தினான் (செய்யுள்.284). இத்தகைய சுவை மிக்க உவமை கூறியதனால், இச்செய்யுள் இயற்றிய புலவர் தேய்புரிப் பழங் கயிற்றினார்என்றே பெயர் வழங்கப் பெற்றார் !

 

நற்றிணையைத் தொகுப்பித்தவன் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி.  தொகுத்தவர் பெயர் தெரியவில்லை. நற்றிணைப் பாடல்களில் 234 ஆம் பாடல் முற்றும் கிடைக்கவில்லை.  385 ஆம் பாடலின் பிற்பகுதியும் மறைந்து போயிற்று !

 

ஆங்கிலச் சொற்கள் பலவற்றுக்கு நேர்ப் பொருள் அல்லது இணைப் பொருள் அல்லது புனைப் பொருள் தரும் அழகிய தமிழ்ச் சொற்கள் பல நற்றிணைப் பாடல்களில் காணக் கிடக்கின்றன.  அவற்றுள் ஒரு சிலவற்றைக் காண்போமா !

-------------------------------------------------------------------------------------

 

BAZAAR, SHOP.............= அங்காடி (நற்.258.7)

KITCHEN........................= அட்டில் (நற்.120.9)I

INSTRUMENTALIST.......= இயவர் (நற்.113.10)

POND..............................= இலஞ்சி (நற்.160.8)

CART...............................= ஒழுகை (நற்.183.3)

DRAWING.......................= ஓவம் (நற்.268.4)

HUNTING DOG...............= கத நாய் (நற்.212.5)

MECHANIC.....................= கம்மியர் (நற்.94.4)

WAREHOUSE.................= கிடங்கில் (நற்.65.2)

WELL...............................= கூவல் (நற்.240.7)

JAR..................................= சாடி (நற்.295.7)

STORE ROOM................= பொதியில் (நற்.379.11)

SQUARE..........................= சதுக்கம் (நற்.319.5)

DEWY SEASON.............. = அற்சிரம் (முன்பனிக்காலம்) (நற்.84.6)


-------------------------------------------------------------------------------------

-------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ் இலக்கியம்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, மேழம் (சித்திரை) 18]

(01-05-2022}

-------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக