எட்டு இலக்கியங்களைத் தன்னகத்தே
கொண்ட தொகை நூல்களின் பொதுப் பெயர்
எட்டுத் தொகை !
நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித் தொகை, அகநானூறு, புறநானூறு என்பன எட்டுத் தொகை நூல்களாம். இவற்றை நினைவில்
வைத்துக் கொள்ள வாய்ப்பாக ஒரு பாடல் உளது. உங்களில் பலர் படித்த பாடல் தான் !
-------------------------------------------------------------------------------------
”நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு;
.......ஒத்த பதிற்றுப் பத்து ஓங்கு பரிபாடல்,
கற்றறிந்தோர் ஏத்தும் கலியொடு அகம்புறமென்று,
.......இத்திறத்தது எட்டுத் தொகை”
!
-------------------------------------------------------------------------------------
இவற்றுள் புறநானூறு, பதிற்றுப் பத்து ஆகிய இரண்டும்
புறப்பொருள் பற்றிய செய்திகளை நன்கு புலப்படுத்துவன. அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை என்னும் ஐந்தும்
அகப்பொருளாகிய இன்பத்துறை பற்றிய ஒழுக்க உணர்ச்சிகளை அழகுற எடுத்துக் கூறுவன.
பரிபாடல் அகம், புறம் என்னும் இரண்டையும் இனிது
எடுத்து உரைப்பது !
புறப்பொருள் பற்றிய தொகை நூல்களில், போரைப்பற்றிய பாடல்கள் மிகுதியாகக் காணப்படுகின்றன. எனவே, சங்க கால தமிழ்ப் புலவர் காதல், வீரம் என்னும் இரண்டைப் பற்றி மிகுதியாகப் பாடினர் என்பது தெளிவாகும்
!
ஏறத்தாழப் புலவர் பெருமக்கள் ஐந்நூற்றுவர் பாடிய பாக்களின் தொகுதியே
எட்டுத் தொகையாகும். அப்புலவர்கள் தமிழகத்துப் பல ஊர்களைச் சேர்ந்தவர்; பரந்துபட்ட காலத்தவர்;
பல்வேறு
தொழிலினர்; இவருள் சேர, சோழ, பாண்டியர் என்ற முடியுடைப்
பெருவேந்தரும், அரசமாதேவியரும், சிற்றரசரும் அவர்தம் மகளிரும் இடம் பெற்றுள்ளனர் !
எட்டுத்தொகைச் செய்யுள்களில், பெருநில வேந்தரின் பெருமிதமான போர்த் திறன்களையும், வெற்றிச் சிறப்புகளையும் விரித்துக் கூறும் பாக்கள் பல; வரையாது வழங்கும் வள்ளன்மையை வகுத்துரைக்கும் செய்யுள்கள் பல;
நல்லொழுக்கத்தை நவில்வன சில; கல்வி மேம்பாட்டினைக் கருத்தில் பதிய வைப்பன சில !
ஆட்சி முறையை அழகுற எடுத்து இயம்புவன சில; மறக்குடி மகளிரின் மாண்பைப் புலப்படுத்துவன சில; கற்பரசிகளின் காதல் வாழ்வைக் கவினுறக் காட்டுவன பற்பல; வெஞ்சின வேந்தர் வஞ்சினம் கூறும் செய்யுள்கள் சில; போரைத் தடுத்துப் புலவர் அறிவு புகட்டுவன சில; கடவுள் நன்னெறி காட்டுவன சில; குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐந்திணை அன்பொழுக்கங்களை இன்பம் ததும்ப இனிது
விளக்குவன எத்துணையோ பல; இயற்கைக் காட்சிகளை எழிலுறச்
சித்திரித்துக் காட்டுவன பல !
இச்செய்யுள்களுள் இடையிடையே தொன்ம (புராண) மறவனப்பு (இதிகாச)ச் செய்திகளும், தமிழ்நாட்டுத் தலைநகரங்களைப் பற்றிய சிறப்புக்களும், வட இந்திய நாட்டினைப் பற்றிய பல செய்திகளும், பிற வரலாற்றுக் குறிப்புகள் சிலவும் இடம் பெற்றுள்ளன !
எட்டுத் தொகையில் இடம்பெற்றுள்ள நூல்கள் ஒவ்வொன்றைப் பற்றியும் அடுத்து வரும் நாள்களில் காண்போம் !
பல பெருமைகளுக்குச் சொந்தக்காரர்களாகிய நாம், நமது இலக்கியங்களைப் பற்றி ஓரளவுக்காவது தெரிந்து வைத்திருப்பது தானே
சிறப்பு ! படித்த இலக்கியங்களைப் பற்றிய செய்திகளைக் காலப்போக்கில் மறந்து
விட்டோர் பலர்; படிப்பதற்கான வாய்ப்புகளைத்
தவறவிட்டோர் பலர்; ஆழமாக அன்றி அகலமாகத் தெரிந்து
வைத்திருப்போர் பலர்; தெரிந்து கொள்ள வாய்ப்புக் கிடைக்காதா
என்று எண்ணத்தில் காத்திருப்போர் பலர் !
செம்மொழி என்னும் தகுதி பெற்று உயர்ந்து விளங்கும் நம்மொழியின்
இலக்கியங்களைப் பற்றிய செய்திகளை மீண்டும் நம் சிந்தனைக்கு விருந்தாக்கும் செயலில்
ஈடுபடுவது தவறல்லவே ! தொடங்குவோம் வாரீர் !!
இன்றைய கட்டுரையை நிறைவு செய்யும் முன் ஒரு செய்தி. ஆங்கிலச்
சொற்களுக்கு நேர் பொருள் தரும் தமிழ்ச் சொற்களைத் தேடி எங்கெங்கோ அலைகிறோம்.
இலக்கியங்களில் தேடினோமா ? இனியாவது தேடுவோம். ஓரிரு புதிய
சொற்கள் உங்கள் பார்வைக்கு !
--------------------------------------------------------------------------------------
MESS.............=
அயிலகம் (புறநானூறு- பாடல்.399)
BALCONY....=
அரமியம் (மதுரைக் காஞ்சி.வரி.451)
OUT-PUT......=
ஈகை வளம் (கலித்தொகை.95:9)
----------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(vedarethinam@gmail.com)
ஆட்சியர்,
“தமிழ் இலக்கியம்” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு 2053, மேழம் (சித்திரை)
13]
{26-04-2022}
-------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக