துன்பம் தரும் இயல்புடைய
வாடை எப்படி (நெடு) நல் வாடை
ஆயிற்று ?
நெடுநல்வாடை பத்துப் பாட்டுத் தொகை நூல்களுள் ஒன்று. பாண்டியன் நெடுஞ்செழியன் போர்க்களம் புக்கதால், அவனைப் பிரிந்து வாழும் அரசமாதேவிக்கு வாடைக் காலமானது நெடிய துன்பம் தரும் ஊழிக் காலம் போல் தோன்றியது. ஆனால் போர்க்களத்தில் அரசனுக்கு வெற்றியை ஈட்டித் தந்ததும் இதே வாடைக் காலம் தான் !
அரசமாதேவிக்கு நெடிய துன்பம் தந்த வாடைக் காலம், இப்போது அரசனின் வெற்றிக்குக் காரணமான நல் வாடைக் காலமாக அமையப் பெற்றதால், நெடுநல் வாடை என்று இந்நூலுக்குப் பெயர் வரலாயிற்று என்று கூறுவர் கற்றறிந்த சான்றோர் !
இந்நூல் 188 அடிகள் கொண்ட பாடலால் யாக்கப்பெற்றது. பெரும்புலவர் நக்கீரனார் இப்பாடலை இயற்றியவர் !
பாண்டியன் நெடுஞ்செழியனைப் பிரிந்து வருந்தும் அரசமாதேவிக்கு, அவ்வருத்தம் தீரும்படி, ‘அரசன் பகைவரை வென்று விரைவில் திரும்பி வருவான்’ என்று கொற்றவைத் தெய்வத்தை வணங்கும் ஒரு பெண் கூறியதாக இப்பாட்டு அமைந்துள்ளது !
இந்நூலின்கண், ஆநிரை மேய்ப்போர் வாடைக்காற்றால்
துன்புறுதல், கூதிர்க் கால நிலை, ஊரினது செழிப்பு, கூதிர்க்காலம் (குளிர்காலம்)
நிலைகொண்டமையால் நேர்ந்த விளைவுகள், அரசியின்
அரண்மனை, அரண்மனையில் எழும் ஓசைகள், அந்தப்புரத்தின் அமைப்பு, செவிலியரும்
சேடியரும் அரசியைத் தேற்றி நன்மொழி கூறல், பாசறையில் அரசன்
நிலை, போன்றவையும் பிறவும் விளக்கமுறக்
கூறப்பட்டுள்ளன !
கூதிர்காலத்தின் குளிரின் கடுமையால் பாண்டிய நாட்டில் இயல்புநிலை
பாதிக்கப்பட்டு அனைத்து உயிர்களும் எவ்வாறு முடங்கிப் போயின என்பதற்கு எடுத்துக்
காட்டு ஒன்றை புலவர் தருகின்றார். வீட்டின் இறப்புகளில் குடியிருக்கும் புறாக்கள், குளிரின் கடுமையால் வெளியில் சென்று இரை தேடாது, இராப் பகலாய், தம் குஞ்சுகளுடன் முடங்கிக்
கிடந்தனவாம். (இறப்பு = சுவருக்கும் கூரைக்கும் இடையில் உள்ள பொந்து) இதோ அந்தப்
பாடல் வரிகள்:-
------------------------------------------------------------------------------
”மனையுறை புறவின் செங்காற் சேவல்
இன்புறு பெடையொடு மன்றுதேர்ந் துண்ணாது,
இரவும் பகலும் மயங்கி, கையற்று
மதலைப் பள்ளி மாறுவன இருப்ப...”
-------------------------------------------------------------------------------
இதுபோன்ற சுவைக்கத் தக்க பல நிகழ்வுகள் நெடுநல்வாடைப் பாடலில்
பரவலாகக் காணப்படுகின்றன !
நெடுநல் வாடையில், கலைச் சொற்கள் சிலவும் பாடலூடே கலந்து காணக் கிடக்கின்றன. இக்காலத்தில் புழங்கும் ஆங்கிலச் சொற்கள் சிலவற்றுக்கு நேர்ப் பொருள் தரும் அல்லது இணைப் பொருள் தரும் அல்லது புனைப் பொருள் தரும் தமிழ்ச் சொற்கள் உங்கள் பார்வைக்கு வைக்கப்படுகின்றன. படித்துச் சுவையுங்கள், வாய்ப்பு வருகையில் வழக்கிலும் கொண்டு வாருங்கள் !
--------------------------------------------------------------------------------
AUTUMN.....................=
கூதிர் காலம் (பா.வரி.11)
SOFA............................=
இணையணை (பா.வரி.133)
KINDERGARTEN.......=
மதலைப்பள்ளி (பா.வரி.48)
SKILLED
ARTISAN...= கைவல் கம்மியன் (பா.வரி.57)
BED...............................=
சேக்கை (பா.வரி.131)
NURSE.........................=
செவிலி (பா.வரி.153)
STOOL.........................=
பாண்டில் (பா.வரி.123)
--------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(vedarethinam70@gmail.com)
ஆட்சியர்,
“தமிழ் இலக்கியம்” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு:
2053, மீனம் (பங்குனி) 28]
{11-04-2022}
----------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக