தமிழ் இலக்கியங்களைப் பற்றிய ஓர் அறிமுகம் !

விரும்பும் பதிவைத் தேடுக !

செவ்வாய், 19 ஏப்ரல், 2022

இலக்கிய அறிமுகம் (09) குறிஞ்சிப்பாட்டு !

 

பண்டைய மலர்கள்   99-ன் பெயர்களை  இப்பாட்டில்   பட்டியலிடுகிறார் கபிலர் !

 

பத்துப்பாட்டுத் தொகை நூல்களுள் எட்டாவதாக இருப்பது குறிஞ்சிப் பாட்டு. இதனை இயற்றியவர் கபிலர். இருநூற்று அறுபத்தோறு அடிகளை உடைய குறிஞ்சிப் பாட்டில், அக்காலப் பூக்களின் பெயர்களைப் பட்டியலிட்டுப் புலவர் பாடியுள்ள திறம் வியப்பை அளிக்கிறது !

 

தலைவனும் தலைவியும் தம்முள் எதிர்ப்பட்டுக் காதல் வாழ்க்கைக்கு உடம்படுதல் குறிஞ்சிஒழுக்கமாகும். காதல் வாழ்வையடுத்து மணம் முடித்து இல்லற வாழ்வு தொடங்கும். இல்லறம் நடத்தும் காலை, பொருள் தேடித் தலைவன் பிரிந்து செல்வது பாலைஒழுக்கம். பிரிந்து சென்ற தலைவன் திரும்பி வரும் வரையில் தலைவி ஆற்றியிருத்தல் (மனத் துயருடன் பொறுத்து இருத்தல்) முல்லைஒழுக்கம் !

 

தலைவன் பொருளீட்டிக் கொண்டு திரும்பி வருகிறான். ஆனால் சற்று கூடுதல் காலம் ஆகிவிட்டது. காலம் தாழ்த்தி வந்ததால் தலைவன் மீது சினம் கொண்டு தலைவி ஊடுகிறாள். இவ்வாறு ஊடல் கொள்ளும் வாழ்க்கை முறையை மருதம்ஒழுக்கம் என்றனர் நம் முன்னோர் !

 

ஊடல் கொண்ட  தலைவி, சற்று நேரத்தில் சினம் நீங்கி, தலைவன் மீது இரக்கம் கொள்கிறாள். இதை நெய்தல்ஒழுக்கம் என்கின்றன இலக்கியங்கள். குறிஞ்சிப் பாட்டில் சொல்லப்படும் நிகழ்வுகளுக்கு வருவோம் !

 

தலைவனும் தலைவியும் சந்தித்து ஒருவர் மீது ஒருவர் காதல் கொண்டு களவு முறையில் ஒழுகி வருகின்றனர்.  தலைவி தன் தலைவன் மீது கொண்ட காதலைத் தோழி  செவிலித் தாய்க்கு எடுத்துக் கூறுவது போல இப்பாட்டு அமைந்துள்ளது. ஆகையால் இதற்குக் குறிஞ்சிப் பாட்டுஎனப் பெயர் வழங்கலாயிற்று !

 

இப்பாட்டின்கண் முருகவேளைப் பற்றிய செய்திகளும், பற்பல பூக்களின் பெயர்களும், பற்பல பூச்சிகளின் பெயர்களும், குறிஞ்சி நில மக்களின் பழக்க வழக்கங்களும், பிறவும் எடுத்துரைக்கப்பட்டுள்ளன !

 

பளிங்கினைக் கரைத்துச் சொரிவது போல அருவி வீழ்கிறது. அதில் உருவாகும் சுனையில் தலைவியும் தோழியரும், நீராடிக் கரையேறுகின்றனர். தலைமுடியைப் பிழிந்து உலர்த்தும் அவர்களது கண்கள், நீண்ட நேரம் நீராடியதால் சிவந்து காணப்படுகின்றன. இக்காட்சியைக் குறிஞ்சிப் பாட்டு வண்ணிக்கிறது பாருங்கள் !

 

-----------------------------------------------------------------------------------

 

அண்ணல் நெடுங்கோட்டு இழிதரு, தெள் நீர்

அவிர் துகில் புரையும் அவ்வெள் அருவி,

தவிர்வு இல் வேட்கையேம் தண்டாது ஆடிப்

பளிங்கு சொரிவு அன்ன பாய் சுனை குடைவுழி,

நளி படு சிலம்பில் பாயம் பாடிப்

பொன் எறி மணியின் சிறுபுறம் தாழ்ந்த எம்

பின்னிருங் கூந்தல் பிழிவனம் துவரி, 

உள்ளகம் சிவந்த கண்ணேம் !

 

------------------------------------------------------------------------------------

 

 

அடுத்து என்ன செய்கின்றனர் ? அங்கு பூத்திருக்கும் மலர்களின் அழகில் மயங்கி, அவற்றைப் பறித்து, அகன்ற பாறையில் குவிக்கின்றனர். எத்துணைப் பூக்கள் தெரியுமா ?

 

செங்காந்தள், ஆம்பல், அனிச்சம், குவளை, குறிஞ்சி, வெட்சி, செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை, உந்தூழ், கூவிளம், எறுழம், சுள்ளி, கூவிரம், வடவனம், வாகை, குடசம், எருவை, செருவிளை, கருவிளை, பயினி, வானி, குரவம், பசும்பிடி, வகுளம், காயா, ஆவிரை, வேரல், சூரல், பூளை, நறுங்கண்ணி, குருகிலை, மருதம்......அப்பப்பா ! படித்து மூச்சு வாங்குகிறதா? இன்னும் இருக்கின்றன ! படியுங்கள் !

 

கோங்கம், போங்கம், திலகம், பாதிரி, செருந்தி, அதிரல், சண்பகம், கரந்தை, குளவி, கலிமா, தில்லை, பாலை, முல்லை, குல்லை, பிடவம், மாரோடம், வாழை, வள்ளி, நெய்தல், தாழை, தளவம், தாமரை, ஞாழல், மௌவல், கொகுடி, சேடல், செம்மல், செங்குரலி, கோடல், கைதை, நறுவழை, காஞ்சி, பாங்கர், மராம், தணக்கம், ஈங்கை, இலவம், கொன்றை, அடும்பு, ஆத்தி, அவரை, பகன்றை, பலாசம், பிண்டி...அவ்வளவு தானா? இல்லை ! இல்லை ! இன்னும் இருக்கிறது ! படியுங்கள் !!

 

வஞ்சி, பித்திகம், சிந்துவாரம், தும்பை, துழாய், தோன்றி, நந்தி, நறவம், புன்னாகம், பாரம், பீரம், குருக்கத்தி, ஆரம், காழ்வை, புன்னை, நரந்தம், நாகம், நள்ளிருள் நாறி, குருந்து, வேங்கை, புழகு, மால்...அம்மம்மா ! இத்துணைப் பூக்களையும் பறித்துப் பாறையில் குவித்திடும் பாவையரைப் பற்றிப் பாடும் குறிஞ்சிப் பாட்டு இலக்கியங்களிடையே தனி இடம் பிடித்து உயர்ந்து நிற்கிறது என்பதை மறுக்க முடியாது !

 

இத்தகைய சுவைமிக்கக் காட்சிகளைப் பாடலாகத் தொடுத்து நமக்கு அளித்திருக்கும் குறிஞ்சிப் பாட்டில், சில ஆங்கிலச் சொற்களுக்கு நேர்ப் பொருள்  அல்லது இணைப் பொருள் அல்லது புனைப் பொருள் தரும் தமிழ்ச் சொற்கள் பரவிக் கிடக்கின்றன. அவற்றுள் ஒரு சிலவற்றை மட்டும் பார்ப்போமா !

 

------------------------------------------------------------------------------------

 

DRAWING HALL................= அகலறை (பா.வரி.98)

MUSICAL INSTRUMENT. = இன்னியம் (பா.வரி.193)

HUNTING DOG..................= கதநாய் (பா.வரி.240)

GENTLE MAN....................= பெருந்தகை (பா.வரி.206)

GONG (சேகண்டி)..........= எறிமணி (பா.வரி.59)

HAIR DYE...........................= தகரம் (பா.வரி.108)

-----------------------------------------------------------------------------------

 

-----------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ் இலக்கியம்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, மேழம் (சித்திரை) 06]

{19-04-2022)

------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக