தமிழ் இலக்கியங்களைப் பற்றிய ஓர் அறிமுகம் !

விரும்பும் பதிவைத் தேடுக !

சனி, 9 ஏப்ரல், 2022

இலக்கிய அறிமுகம் (07) மதுரைக்காஞ்சி !

எத்துணைக் கலைச் சொற்களை நமக்குத் தந்துள்ளார் மாங்குடி மருதனார் !

 

மதுரைக் காஞ்சி, பத்துப் பாட்டு நூல்களுள் ஒன்று. மாங்குடி மருதனார் என்னும் புலவர் பெருமான் 782 அடிகளை உடைய இந்நூலை இயற்றியுள்ளார் !

 

வீடுபேறு காரணமாகப் பல்வேறு நிலையாமையைச் சான்றோர் உணர்த்துதல் காஞ்சி எனப்படும். இது மதுரை நகரில், பாண்டியன் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியனுக்குக் கூறிய காஞ்சியாதலால், ”மதுரைக் காஞ்சிஎனப்பட்டது !

 

இப்பாட்டில், பாண்டிய மன்னனின் முன்னோர் சிறப்பு, அவனது போர் வலிமை, பகைவரை வென்று அவர்களை அற நெறியில் நிறுத்திய மாண்பு, மதுரை நகர அமைப்பு, பாணர் இருக்கை, நாளாங்காடி, மன்னனது ஈகைச்  சிறப்பு முதலிவற்றைக் கூறி, வாழ்நாள் முழுவதும் மன்னன் இனிதாக வாழ்ந்திட வாழ்த்துகிறார் புலவர் !

 

சங்க காலத்தில் மதுரையில் திருவிழா நாட்களில் தெருக்களில் கடைகள் வரிசையாக  அமைந்திருந்தன. பகல் நேரத்தில் வாணிகம் செய்த வணிகர்கள், இரண்டாம் யாமத்தில் சங்குகளின் ஒலி அடங்கிய பின்பு அவர்களது கடைகளை அடைத்தனர்.  வீட்டுக் கதவை அடைத்துவிட்டு மகளிர் உறங்கத் தொடங்கினர். பல தின்பண்டங்களை  மடைத் தொழில் வல்லோர் செய்து விற்றனர் !

 

பகல் வேளையில் வணிகர்களின் மனைவியர் அவர்களுக்கு உதவியாய் இருந்து தேன் கூட்டைப் போன்ற இனிய அடை, தேங்காயும் சர்க்கரையும் கூட்டிச் செய்த மோதகம், அப்பம் போன்றவற்றையும் செய்து விற்றனர். திருவிழாக் காலங்களில் கூத்து இயற்றும் கூத்தர்களும் உறங்கச் சென்றனர்.  இக்காட்சியை விவரிக்கிறது கீழ்க் கண்ட பாடல் வரிகள் !


-------------------------------------------------------------------------------

 

பணிலம் கலியவிந் தடங்கக் காழ்சாய்த்து

நொடைநவில் நெடுங்கடை அடைத்து மடமதர்,

ஒள்ளிழை மகளிர் பள்ளி அயர,

நல்வரி இறாஅல் புரையும் மெல்லடை,

அயிருருப் புற்ற ஆடமை விசயம்

கவவொடு பிடித்த வகையமை மோதகம்

தீஞ்சேற்றுக் கூவியர் தூங்குவனர் உறங்க,

விழவின்  ஆடும் வயிரியர் மடிய,”

 

------------------------------------------------------------------------------

 

பௌத்தப் பள்ளி, அந்தணர் பள்ளி, அமணப் பள்ளி, அறங்கூறு அவையம், காவிதி மாக்கள், பண்டங்கள் விற்கும் வாணிகர், நாற்பெருங் குழு, பல்வேறு தொழிலாளர்களின் வாழ்க்கை முறை, உணவுப் பொருள்களின் வகைகள், குரவைக் கூத்து, ஆகியவை பற்றிய செய்திகள் இப்பாட்டில் இடம்பெற்றுள்ளன !

 

அரசியல் பிழையாது அறநெறி காட்டி, பெரியோர் சென்ற அடிவழிப் பிழையாது...” (பாடல் வரி.191, 192) ஆட்சி செலுத்த வேண்டும் என்பதை மதுரைக் காஞ்சி மூலம் சுட்டிக்காட்டுகிறார் மாங்குடி மருதனார் !

 

நெடுஞ் சுழிப் பட்ட நாவாய் போல..” (நீர்ச் சுழியில் அகப்பட்ட தோணி போல), “பழம் தேர் வாழ்க்கைப் பறவை போல” (பழங்களை நாடியுண்ணும் பறவை போல), முந்நீர் நாப்பண் ஞாயிறு போல (கடல் நடுவே எழும் கதிரவன் போல), பன்மீன் நடுவண் திங்கள் போல” (குவிந்து கிடக்கும் விண்மீன்களுக்கு இடையே உலாவரும் கொழுமதி போல) என்பன போன்ற அழகிய உவமைகள் மதுரைக் காஞ்சியில் நிறைந்து காணப்படுகின்றன !

 

ஆங்கிலச் சொற்கள் பலவற்றுக்கு நேர்ப் பொருள் அல்லது இணைப்பொருள் அல்லது புனைப் பொருள் தரும் அழகிய தமிழ்ச் சொற்கள் நூற்றுக் கணக்கில் பாடல் முழுதும் பரவிக் கிடக்கின்றன. அவற்றுள் ஒருசிலவற்றை மட்டும் காண்போமா !


------------------------------------------------------------------------------

 

BANNER..........................= பதாகை (பா.வரி.373)

BUNGALOW....................= வளமனை (வரி.603)

CAKE SHOP...................= பண்ணியக்கடை (வரி.661)

CAKE...............................= பண்ணியம் (வரி.405)

CLIP.................................= கண்ணி (பா.வரி.596)

CROP CUTTER..............= அரிநர் (பா.வரி.110)

CROP...............................= விளையுள் (பா.வரி.109)

DAY – BAZAAR..............= நாளங்காடி (பா.வரி.430)

DITCH & CREST...........= அவலும் மிசையும் (வரி.240)

DRILLER..........................= குயினர் (பா.வரி.511)

EVENING BAZAAR.........= அல்லங்காடி (வரி.544)

HONORARY TITLE.........= காவிதி (பா.வரி.499)

HONORABLE...................= மேதகு (பா.வரி.565)

JANGRI (ஜாங்கிரி)......= தீம்புழல் (பா.வரி.395)

JUDICIAL COURT...........= அறங்கூறு அவையம்(வரி.492)

MECHANIC.......................= கம்மியர் (பா.வரி.521)

MOTO................................= பொன்னுரை (பா.வரி.513)

NECKLACE.......................= மதாணி (பா.வரி.461)

PASTURAGE....................= மேய் புலம் (பா.வரி.303)

SKILLED WORKER.........= வன்கை வினைஞர் (வரி.262)

SLIPPER...........................= தொடுதோல் (வரி.636)

TERRACE.........................= அரமியம் (பா.வரி.451)

TURNER...........................= கடைநர் (பா.வரி.511)

V.I.P..................................= விழுமியர் (பா.வரி.200)

WHIRL-POOL...................= நெடுஞ்சுழி (பா.வரி.379)

WORKER..........................= வினைஞர் (பா.வரி.539)


------------------------------------------------------------------------------

------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ் இலக்கியம்” வலைப்பூ,

[தி.ஆ:2053, மீனம் (பங்குனி) 26]

{09-04-2022}

--------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக