தமிழ் இலக்கியங்களைப் பற்றிய ஓர் அறிமுகம் !

விரும்பும் பதிவைத் தேடுக !

வியாழன், 21 ஏப்ரல், 2022

இலக்கிய அறிமுகம் (10) பட்டினப் பாலை !

காவிரிப் பூம்பட்டினத்தைச் சிறப்பித்துப் பாலைத் திணையில் பாடப் பெற்ற இலக்கியம்.

 

பத்துப் பாட்டு தொகை நூல்களுள் ஒன்பதாவதாக இடம்பெறுவது பட்டினப்பாலை. இந்நூலின் பெயரில் உள்ள பட்டினம் என்னும் சொல் காவிரிப் பூம்பட்டினத்தைக் குறிக்கிறது. பாலை என்னும் சொல் பிரிவு என்னும் பொருளைத் தருவது !

 

காவிரிப் பூம்பட்டினத்தைச் சிறப்பித்துப் பாலைத் திணையில் இப்பாட்டு அமைந்து  உள்ளமையால், பட்டினப் பாலை எனப் பெயர் பெற்றது. 301 அடிகளால் ஆன பாடலைக் கொண்டு இந்நூலை யாத்தவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார் என்னும் பெரும் புலவர் !

 

வேற்று நாட்டிற்குச் செல்ல எண்ணிய தலைவன் ஒருவன், தனது நெஞ்சை விளித்து, ‘என் தலைவியில் தோள்கள் கரிகால் வளவனுடைய செங்கோலைக் காட்டிலும் குளிர்ச்சி உடையவை; கடந்து செல்லக் கருதும் காட்டு வழிகள், அவ்வரசன் பகைவர் மேற் செலுத்தும் வேலைக் காட்டிலும் வெப்பத்தை உடையவை !

 

ஆதலால், பல சிறப்புகளை உடைய காவிரிப் பூம்பட்டினத்தையே பரிசாகப் பெறுவேன்; ஆயினும் என் தலைவியைப் பிரிந்து வரமாட்டேன்என்று தான் பிரிந்து செல்வதை தவிர்த்துக் கூறுவதாக இப்பாட்டு அமைந்துள்ளது!

 

இது கரிகாற் சோழன் மீது பாடப்பட்டது; இப்பாட்டில், சோழ வள நாட்டின் செழுமையும், காவிரிப்பூம் பட்டினத்தின் சிறப்புகளும், கரிகாலனுடைய போர்ச் செயல்களும், ஆட்சிமுறையும், நகர மாந்தர் தம் பழக்க வழக்கங்களும், கடல் வாணிகப் பெருமையும், கடைத் தெருக்களின் சிறப்பும், பிறவும் நன்கு புலப்படுத்தப்பட்டுள்ளன !

 

இப்பாட்டினைப் பாடியதற்காக, கடியலூர் உருத்திரங் கண்ணனாருக்குக் கரிகால் வளவன் பதினாறு நூறாயிரம் பொன் பரிசிலாக வழங்கினான் என்பது, கலிங்கத்துப் பரணி என்னும் இலக்கியத்தின் மூலம் தெரியவருகிறது !

 

மாசு மறுவற்றுப் பளிச்சென்று ஒளிவீசும் வெள்ளி (சுக்கிரன்) கிழக்கில் தோன்றாமல் தென் திசைக்குப் போகலாம், நீர்த் துளிகளை உண்டு, பாடித் திரிந்து  மகிழும் வானம்பாடி, வருந்தும் வகையில், மழை பெய்வதைத் தவிர்த்து வானம் பொய்க்கலாம், ஆனால் மலையில் தொடங்கிக் கடலில் புகும் காவிரி ஆறு என்றும் தவறாமல் தன்னுடைய நீரை வயல்களில் நிறைத்துப் பரப்பிப் பொன் கொழிக்கும் சோழ வள நாடு, என்று காவிரியைப் பற்றிப் பாடுகிறார் புலவர். இதோ அந்தப் பாடல் வரிகள் :-

-------------------------------------------------------------------------------------

 

வசையில் புகழ் வயங்கு வெண்மீன்

திசை திரிந்து தெற்கு ஏகினும்,

தற்பாடிய தளியுணவின்

புள்தேம்பப் புயல் மாறி,

வான் பொய்ப்பினும் தான் பொய்யா,

மலைத் தலைய கடற் காவிரி,

புனல் பரந்து பொன் கொழிக்கும்...

 

-------------------------------------------------------------------------------------

 

காவிரியின் அன்றைய நிலையையும், இன்றைய நிலையையும் ஒப்பிட்டுப் பாருங்கள் ! என்னே காலத்தின் கோலம் ! இயற்கையை மதிக்கத் தெரியாத மனிதன் ! மனிதனை மிதிக்கத் துணிந்துவிட்ட இயற்கை ! இஃது எங்கு கொண்டுபோய் விடுமோ !

 

சிறப்புகள் பல வாய்ந்த பட்டினப்பாலையில் ஆங்கிலச் சொற்களுக்கு நேர்ப் பொருள் அல்லது இணைப் பொருள் அல்லது புனைப் பொருள் தரும் கலைச் சொற்கள் பல பரவிக் கிடக்கின்றன. அவற்றுள் ஒரு சிலவற்றை மட்டும் காண்போமா !

--------------------------------------------------------------------------------------

 

KITCHEN..................................= அட்டில் (பட்.43)

BAZAAR....................................= கடைத்தெரு (பட்.158)

VERANDAH..............................= இடைகழி (பட்.144)

CROCODILE.............................= கராம் (பட்.242)

PLANET....................................= கோள்மீன் (பட்.68)

PAIL...........................................= திண்ணை (பட்.143)

SLIPPER...................................= தொடுதோல் (பட்.265)

CENTER....................................= நாப்பண் (பட்.194)

STAIR–CASE STEPS...............= படிக்கால் (பட்.142)

CAKE.........................................= பண்ணியம் (பட்.203)

BANNER....................................= பதாகை (பட்.182)

VENUS......................................= வெண்மீன் (பட்.01)

BROAD......................................= வியன் (பட்.08)

GUEST HOUSE..........................= துச்சில் (பட்.58)

BRAIDED COCONUT LEAF...... = கிடுகு (பட்.78)

HUT............................................= குரம்பை (பட்.198)

JAIL............................................= பிணியகம் (பட்.222)

SOLDIER...................................= வயவர் (பட்.232)

FOREIGNERS...........................= வம்பலர் (பட்.249)

HUNTERS.................................= எயினர் (பட்266)

 

--------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ் இலக்கியம்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, மேழம் (சித்திரை) 08]

{21-04-2-22}

--------------------------------------------------------------------------------------

2 கருத்துகள்:

  1. என்னைப் போன்றோர் பண்டைத் தமிழ் இலக்கியங்களைப் பற்றி அறிந்துகொள்ள தங்கள் வலைப்பூ மிகவும் உதவியாக இருக்கிறது ! மிக்க நன்றி அய்யா !

    பதிலளிநீக்கு
  2. மிக்க மகிழ்ச்சி ! வாழிய தமிழொளியே ! வாழிய நீவிர் வாழிய வளமுடன் !

    பதிலளிநீக்கு