களவழியை ஊன்றிப் படிப்பவர்கள் போரை வெறுப்பார்கள்; அமைதியையே
விரும்புவார்கள் !
கீழ்க்கணக்கு நூல்களுள் புறப்பொருள் நிகழ்ச்சியாகிய போர்ச்செய்தி பற்றியது
களவழி நாற்பது ஒன்றே. ஏர்க்களம் பற்றியும், போர்க்களம்
பற்றியும் பாடப்பெறும் பாடல்கள் களவழி எனப்படும் !
இந்நூலில் உள்ள செய்யுள்கள் எல்லாம் “களத்து” என்றே
முடியும் வகையில் வெண்பாக்களால் யாக்கப்பெற்றுள்ளன. நேரிசை வெண்பா, பஃறொடை
வெண்பாக்களால் இந்நூல் அமைந்துள்ளது !
சோழன் செங்கண்ணான் என்பவன், சேரமான்
கணைக்கால் இரும்பொறை என்பவனுடன் போர்புரிந்தான். இந்தப் போர் கழுமலம் என்னும்
ஊரிலே நடந்தது. இப்போரில் சேரன் தோற்றான்; சோழன்
வென்றான். தோற்ற சேரன் சோழனால் சிறைப்படுத்தப்பட்டான். சேரனுடைய நண்பர் பொய்கையார்
என்னும் புலவர். அவர் சோழனுடைய வெற்றியைப் புகழ்ந்து பாடிச் சேரனைச்
சிறையிலிருந்து விடுதலை செய்தார். இதுவே இந்நூல் தோன்றுவதற்குக் காரணமாகக்
கூறப்படும் வரலாறு !
இந்நூலிலே யானைப் போரைப் பற்றிய பாடல்களே மிகுதியாகக் காணப்படுகின்றன. சேரமானிடம் யானைப் படைகளே அதிகம். சேரநாட்டில்தான் யானைகள் மிகுதி. ஆதலால், சேரனுக்கும், சோழனுக்கும் நடந்த போரிலே யானைப் படைகளின் சிதைவைப் பற்றிக் கூறுவது வியப்பன்று !
போர்க்களத்தில் நடைபெறும் கொடுமை; போரால் மக்கள் மாண்டு மடியும் குலைநடுங்க வைக்கும் காட்சி; பார்ப்போர் உள்ளத்திலே அச்சத்தை ஊட்டும் போர்க்களக் காட்சி; இவற்றை இக்களவழிப் பாடல்களிலே காணலாம். இந்நூலை ஊன்றிப் படிப்போர் போரை வெறுப்பார்கள்; அமைதியையே விரும்புவார்கள். இக்கருத்தை இந்நூலின் பாடல்களிலே காணலாம் !
போர்க்களத்தில், மடிந்து வீழ்ந்த வீரர்களின் உறவினர்கள் அவர்தம்
உடல்களைத் தேடி அங்குமிங்கும் ஓடுகின்றனர்.; உடலத்தை
கண்டு அழுது அரற்றுகின்றனர்; இக்காட்சி, மரங்கள்
அடர்ந்த சோலையிலே, பெருங்காற்று புகுந்து சுழன்று சுழன்று அடிப்பதைக் கண்டு, அஞ்சிய
மயிலினங்கள், வெவ்வேறு திசைகளிலே சிதறி ஓடுவதைப்போல இருந்தது என்று
கூறுகின்றது ஒரு செய்யுள். இதோ அந்தப் பாடல் :-
-----------------------------------------------------------------------------------
கடிகாவில் காற்று உற்று எறிய, வெடிபட்டு
வீற்றுவீற்று ஓடும் மயில் இனம்போல்-நாற்றிசையும்
கேளிர் இழந்தார் அலறுபவே; செங்கண்
சினமால் பொருத களத்து.
-----------------------------------------------------------------------------------
மற்றொரு பாட்டிலே மரவினைஞர் (தச்சர்) வேலை செய்யும் இடத்தையும், போர்க்களத்தையும்
ஒப்பிட்டுக் காட்டியுள்ளார் புலவர். இக்காட்சியைக் காணும்போது யாருடைய உள்ளமும்
உருகாமல் இருக்காது. தச்சர் வேலை செய்யும் இடத்தைப் பார்த்தால் அலங்கோலமாகத்தான்
காணப்படும். வேலை செய்யும் கருவிகள் பல இடங்களிலே கிடக்கும்; அறுபட்ட
மரங்கள்; துளை இடப்பட்ட
சட்டங்கள்; செதுக்கிய சிராய்த் தூள்கள்; இவை
எங்கு பார்த்தாலும் சிதறிக் கிடக்கும்.
போர்க்களத்திலும் ஆயுதங்கள் சிதறிக்கிடக்கும்; பிணங்கள் குவிந்து கிடக்கும்; துண்டிக்கப்பட்ட கை கால்கள் சிதறிக் கிடக்கும்; சிதைந்த
உடல்கள் உருமாறிக் கிடக்கும். யானை, தேர், குதிரை
முதலியனவும் வீழ்ந்து கிடக்கும். இத்தகைய போர்க்களத்திற்குத் தச்சுப்பட்டறையை
ஒப்பிட்டது மிகவும் பொருத்தமானது !
-----------------------------------------------------------------------------------
‘
கொல்யானை பாயக் குடைமுருக்கி எவ்வாயும்
புக்கவாய் எல்லாம் பிணம் பிறங்கத், தச்சன்
வினைபடு பள்ளியில் தோன்றுமே செங்கண்
சினமால் பொருத களத்து.
-----------------------------------------------------------------------------------
இதுபோல் போர்க்களத்தின் காட்சியைக் காட்டும் பாடல்கள் பல. அற்றைத் தமிழில்
படைக்கப்பெற்ற பாடல்கள் இற்றைத் தமிழர்கள் படித்துப் புரிந்து கொள்வது பெரிதும்
கடினமே ! மூலமும் உரையுமாக அமைந்த இக்கால நூல் கிட்டலாம். படித்துப் பண்டைத்
தமிழகத்தின் வரலாற்றைப் புரிந்துகொள்ளுங்கள் !
-----------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(vedarethinam70@gmail.com)
ஆட்சியர்,
“தமிழ் இலக்கியம்” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு: 2053, விடை (வைகாசி) 15]
{29-05-2022}
-------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக