தமிழ் இலக்கியங்களைப் பற்றிய ஓர் அறிமுகம் !

விரும்பும் பதிவைத் தேடுக !

ஞாயிறு, 19 ஜூன், 2022

இலக்கிய அறிமுகம் (46) தேவாரம் !

மாசில் வீணையும் மாலை மதியமும்  ! மறக்கமுடியாத  இனிய தமிழமுது !

 --------------------------------------------------------------------------------------

தேவாரம் என்பது சைவ சமயக் கடவுளான சிவபெருமான் மீது பாடப் பெற்ற பதிகங்கள் அடங்கிய நூல். அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூவரும் தேவாரம் பாடிய நாயன்மார்கள் !

 

திருநாவுக்கரசரும் (அப்பர்), திருஞானசம்பந்தரும் கி.பி. 7 -ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள். சுந்தரமூர்த்தி நாயனார் கி.பி 8 –ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். தேவாரம் பதிக வடிவிலேயே பாடப்பட்டுள்ளது பதிகம் என்பது பத்துப் பாடல்களைக் கொண்டது !

 

கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் தமிழ் நாட்டில் பல்லவர்கள் ஆட்சி செய்து வந்தனர். இந்தச் சமயத்தில் பௌத்தமும் சமணமும் தமிழ்நாட்டில் செல்வாக்குடன் இருந்தன. இம்மதங்களின் செல்வாக்கை முறியடித்து, சைவ சமயத்தைத் தமிழ்நாட்டில் மீண்டும் மலர்ச்சி பெறச் செய்ய அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகியோர் ஊர் ஊராகச் சென்று சமயப் பரப்புரை செய்து வந்தனர் !

 

ஆங்காங்கே இருந்த கோயில்கள்மீது தேவாரங்களைப் பாடினர். சுந்தரமூர்த்தி நாயனார் இவ்வாறு பாடிய தேவாரப் பாடல்கள் பல்லாயிரம் என்று சொல்லப்பட்டாலும், 1026 பாடல்களே கிடைத்துள்ளன. திருநாவுக்கரசர் பாடிய தேவாரப் பாடல்களில் கிடைத்துள்ளவை  எண்ணிக்கை 3066. திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல்களில் கிடைத்துள்ளவை 4158 ஆகும் !

 

அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகியோரின் மறைவுக்குப் பிறகு தில்லைவாழ் பார்ப்பனர்கள் இவர்கள் பாடல்கள் அடங்கிய ஓலைச் சுவடிகளை கோயிலில் ஒரு அறையில் வைத்துப் பூட்டிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. நடராசர் ஆலயத்தில் பூட்டப்பெற்ற  அறையில் கேட்பாரற்றுக் கிடந்த தேவார ஓலைச் சுவடிகளில் பெரும்பகுதி சிதலுக்கு (கரையான்) இரையாகி அழிந்து போயிருந்தது. கி.பி.பத்தாம் நூற்றாண்டில் மாமன்னன் இராசராசன் எஞ்சிய சுவடிகளை மீட்டு வந்து நம்பியாண்டார் நம்பி என்பவரைக் கொண்டு பாதுகாத்து தொகுக்கச் செய்தார் என்று கூறப்படுகிறது !

 

நம்பியாண்டார் நம்பி இவ்வாறு தொகுத்த  நூல்களுக்கு பன்னிரு திருமுறைஎன்று பெயர். 1, 2, 3 ஆம் திருமுறைகளில் திருஞனசம்பந்தர் பாடிய தேவாரமும், 4, 5, 6 ஆம் திருமுறையில் திருநாவுக்கரசர் பாடிய தேவாரமும், 7 ஆம் திருமுறையில் சுந்தரர் பாடிய தேவாரமும் மாணிக்கவாசகரின் திருவாசகமும், திருக்கோவையாரும் 8 ஆம் திருமுறையிலும், திருமூலரின் திருமந்திரம் 10 ஆம் திருமுறையிலும், சேக்கிழாரின் பெரியபுராணம் 12 ஆம் திருமுறையிலும் இடம்பெற்றுள்ளன !

 

திருஞான சம்பந்தர், சீர்காழியில் உள்ள தோணியப்பர் மீது தோடுடைய செவியன்என்று தொடங்கும் அவரது முதற் பதிகத்தைப் பாடினார் !

 

திருவதிகை வீரட்டானம் என்னும் தலத்தில் பாடிய கூற்றாயினவாறு விலக்கலீர்என்று தொடங்கும் பதிகமே திருநாவுக்கரசரின் முதற் பதிகம் ஆகும் !

 

பித்தா பிறைசூடி, பெம்மானே !என்று தொடங்கும் தேவாரப் பாடல் தான் சுந்தரமூர்த்தி நாயனாரின் முதற் பதிகமாகும் !

 

தேவாரப் பாடல்களின் மொத்த எண்ணிக்கை....= 8250 ஆகும்.

 

-------------------------------------------------------------------------------------

திருமுறை......................பாடியவர்...பாடல் எண்ணிக்கை

-------------------------------------------------------------------------------------

முதலாம் திருமுறை..............திருஞானசம்பந்தர்...............1469

இரண்டாம் திருமுறை..........திருஞானசம்பந்தர்...............1331

மூன்றாம் திருமுறை.............திருஞானசம்பந்தர்...............1358

                          கூடுதல்.......................................4158

.....................................................................................................................

நான்காம் திருமுறை.............திருநாவுக்கரசர்.....................1070

ஐந்தாம் திருமுறை.................திருநாவுக்கரசர்....................1015

ஆறாம் திருமுறை..................திருநாவுக்கரசர்.....................0981

                          கூடுதல்........................................3066

....................................................................................................................

ஏழாம் திருமுறை....................சுந்தரர்......................................1026

                          கூடுதல்........................................1026

 

-------------------------------------------------------------------------------------

தொகு மொத்தம்...............................................8250

-------------------------------------------------------------------------------------

 

கடலூர் மாவட்டம் திருமுனைப்பாடி பகுதியைச் சேர்ந்த திருவாமூர் என்னும் ஊரில் திருநாவுக்கரசர் பிறந்தார்.  இவருடைய இயற்பெயர் மருள் நீக்கியார்.  இவருடைய தமக்கையார் திலகவதியார்.  சைவ சமயக் குடும்பத்தில் பிறந்த  மருணீக்கியார், பின்பு சமண மதத்தைத் தழுவி தருமசேனர் என்னும் பெயருடன் சமயப் பணியாற்றினார். மீண்டும் சைவ சமயத்திற்கு மாறி, நாவுக்கரசர் என்னும் பெயருடன் சிவத்தொண்டு புரியலானார் !

 

தாம் சென்ற திருத்தலங்களுக்கு எல்லாம், தந்தை இல்லாச் சிறுவனான திருஞான சம்பந்தரை இவர் தம் தோளில் தூக்கி சுமந்து சென்றதால், திருஞானசம்பந்தர் இவரை அப்பர்என்று அழைத்தார். அதுமுதல் திருநாவுக்கரசர் அப்பர்ஆனார் !

 

-------------------------------------------------------------------------------------

மாசில்  வீணையும்  மாலை   மதியமும்

வீசு   தென்றலும்   வீங்கிள  வேனிலும்

மூசு  வண்டறைப்  பொய்கையும்  போன்றதே

ஈசன்  எந்தை இணையடி நீழலே.

-------------------------------------------------------------------------------------

 

திருநாவுக்கரசரின் இப்பாடல், இறைவணக்கப் பாடலாக பல நிகழ்ச்சிகளில் இன்றும் பாடப்படுகிறது ! இறைத் தொண்டுடன் தமிழ்த் தொண்டும் புரிந்த அப்பர் என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசர், தமது 81 –ஆம் அகவையில், இவ்வுலக வாழ்வை நீத்தார் !

 

சுந்தரமூர்த்தி நாயானார் திருமுனைப்பாடி நாட்டிலுள்ள திருநாவலூர் எனும் ஊரில் ஆதி சைவர் குலத்தில் பிறந்தார்.. இவரது இயற்பெயர் நம்பியாரூரன். ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேவாரப் பாடகளை அளித்த  சுந்தரமூர்த்தி நாயனார்,  தனது 18 ஆவது வயதில் மறைந்தார் !

 

திருஞானசம்பந்தர், நாகை மாவட்டம் சீர்காழி என்னும் ஊரில் பார்ப்பனர் குலத்தில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் ஆளுடைய பிள்ளை. இவர் வாழ்ந்த காலம் 16 ஆண்டுகளே என்று சொல்லப்படுகிறது !

 

--------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ் இலக்கியம்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, ஆடவை (ஆனி) 05]

{19-06-2022}

-------------------------------------------------------------------------------------

1 கருத்து: