தமிழ் இலக்கியங்களைப் பற்றிய ஓர் அறிமுகம் !

விரும்பும் பதிவைத் தேடுக !

சனி, 11 ஜூன், 2022

இலக்கிய அறிமுகம் (42) குண்டலகேசி!

மந்திரிகுமாரி திரைப்படத்தின் வாயிலாக, நம்மிடையே, “குண்டலகேசி”  இன்னும் வாழ்கிறாள் !

------------------------------------------------------------------------------------

 

சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி என்னும் ஐந்து காப்பியங்களும் தமிழில்  ஐம்பெருங் காப்பியங்கள் என  அழைக்கப் படுகின்றன !  இவற்றுள் ஒன்றான குண்டலகேசி, நாதகுத்தனார் என்பவர் இயற்றிய தமிழ்க் காப்பியம்  ! இது  பெளத்த சமயம் சார்ந்த காப்பியம்  ஆகும் !

 

இக்காப்பியம் முழுமையான அளவில் நமக்குக் கிடைக்கவில்லை ! பகுதியான அளவிலேயே கிடைத்துள்ளது ! எஞ்சிய பகுதி  இறந்து பட்டது ! இந்நூலின் காலம் கி.பி. 7 ஆம் நூற்றாண்டு ஆகும் ! இந்நூலுக்குக் குண்டலகேசி விருத்தம் என்கிற பெயரும் உண்டு !

------------------------------

கதைச் சுருக்கம்

------------------------------

 

கள்வனை விரும்பி மணக்கும் வணிகர் குலப் பெண்ணான குண்டலகேசி, ஒருநாள், விளையாட்டாக, அவனைக் கள்வன்எனக் கூறிவிட, அன்றிலிருந்து அவர்கள் உறவு ஒட்டா உறவாகிறது !

 

இதனால் தன்னைக் கொல்ல முயன்ற கணவனை  அவள் கொன்று விட்டு, பௌத்தத் துறவியாகி, பௌத்த சமயத்தின் அருமை பெருமைகளைப் பரப்புவதில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதுடன், அதிலேயே தன் வாழ்நாளைக் கழிக்கலானாள்!

 

----------------------------

கதை விரிவு

----------------------------

 

இந் நூலின் கதைத் தலைவி  குண்டலகேசி, செல்வச் செழிப்புமிக்க வணிகர் குலத்தில் பிறந்தவள் ! அவளுக்குப் பெற்றோர் இட்ட பெயர் பத்தா தீசா ! அவள் பருவமடைந்து, கன்னிப் பருவத்தின் தலைவாயிலில் துள்ளித் திரிந்த மானாகத் திகழ்ந்தாள் ! அச்சமயத்தில் அந்த ஊரில் சத்துவான் என்பவன் வழிப்பறிக் கொள்ளை அடித்து, பிடிபட்டு, அரசனால் கொலைக் களத்துக்கு அனுப்பப்பட்டான்!

 

அப்போது அவனைச் சாளரத்தின் வழியே அவள் கண்டு, அவன் மீது காதல் கொண்டாள் ! இதை  அறிந்த அவளது தந்தை, அரசனுக்குப் பெரும்  பொருளை ஈடாகத்  தந்து அக்கள்வனை மீட்டு அவளுக்கு மணமுடித்து வைத்தார் ! இருவரும் சிலகாலம் இனிது வாழ்ந்த பின்னர், அவனுக்குத் தன் மனைவியின் நகைகளையே கொள்ளை அடிக்கும் எண்ணம் வந்தது !


அவளைத் தனியே அழைத்து, மலைச் சாரல் பக்கம் உலாவி வரலாம் என்று சொல்லி அருகில் இருந்த சேரர் மலையின் உச்சிக்கு அழைத்துச் சென்றான். அவன் நடத்தையில் ஐயம் கொண்ட பத்தா அது பற்றி கேட்க, அவன் நகைகளைப் பறித்துக் கொண்டு அவளை மலையுச்சியிலிருந்து தள்ளிவிட இருப்பதைக் கூறினான் ! அது கேட்ட அவள் சாவதற்கு முன் கடைசியாக  ஒருமுறை அவனைச் சுற்றி வந்து வணங்க விரும்புவதாகக் கூறி, அவ்வாறு சுற்றி வருகையில் அவனை அம் மலை உச்சியிலிருந்து தள்ளி விட்டாள் !

 

பின்னர் அவள் பௌத்த மதத்தை தழுவினாள். அவள் கூந்தல் மழிக்கப்பட்டது. பின்னர் வளர்ந்த அவள் முடி வளைந்து குண்டலம் போலக் காட்சி அளித்ததால் குண்டலகேசி என வழங்கப்பட்டாள். அவள் பல ஊர்களுக்குச் சென்று சமயப் பெரியோர்களுடன்  வாதம் புரிந்து, அவர்களை வென்று, கடைசியில் புத்தரிடம் ஞானத் தெளிவு பெற்று, இறுதியில் பௌத்தத் துறவி ஆனாள் !

 

-----------------------------------------------------------------------------------

 

துறவி ஆவதற்கு முன்பு, பத்தா என்னும் குண்டலகேசி, புத்தர் பெருமானை நேரில் கண்டு அவர்முன் மண்டியிட்டுத் தொழுது நின்றாள் ! மூடிய விழிகளை மெல்லத் திறந்து அன்புடன்  அவளை நோக்கிய புத்தர், ”பத்தா ! நீ துன்பப் பட்டது போதும் ! எம்மிடம் வந்து சேர்ந்து துறவற வாழ்வை மேற்கொள்வாயாக !என்று கூறி அருள்புரிந்தார் ! குண்டலகேசியின் வாய் மொழியாகவே இச்செய்தியைக் கூறும் பாடலைப் பாருங்கள் !

 

------------------------------------------------------------------------------------

 

அண்ணலை  நேரே  கண்டேன்,

.........அவன்முனே முழந்தாள் இட்டு,

மண்ணதில்  வீழ்ந்து  நைந்து,

.........வணங்கினேன்; வணங்கி நிற்க,

தண்ணவன்  என்னை  நோக்கி,

.........தகவொரு  பத்தா  இங்கே,

நண்ணுதி  என்றே  சாற்றி,

.........நாடரும்  துறவை ஈந்தான் !

 

------------------------------------------------------------------------------------

 

அரும்பெரும் காப்பியமாகிய குண்டகேசி முழுவதுமாக நமக்குக் கிடைக்கா விடினும், மற்ற நூல்களில் காட்டப்பெற்ற மேற்கோள் செய்யுள்கள் வாயிலாக இக்காப்பியத்தின் கதைப் போக்கை அறிய முடிகிறது !

 

குண்டகேசிக் காப்பியத்தைத் தழுவி, கலைஞர் கருணாநிதியால் கதை, உரையாடல் எழுதப்பெற்று, சேலம் மாடர்ன் தியேட்டர்சினால் எடுக்கப்பெற்று 1950 –ஆம் ஆண்டு வெளியான மந்திரி குமாரிதிரைப் படத்தினை இவ்வேளையில் நினைவுகூர்ந்து பாருங்கள்  !

 

தன் காதலியான அமைச்சரின் மகளை (மந்திரி குமாரி) அவளது  (வஞ்சகக்) காதலன் ஏற்காடு மலை உச்சிக்கு அழைத்துச் செல்கிறான் ! செல்லும் வழியில், அவள் காதலன் வாராய், நீ, வாராய் ! போகுமிடம் வெகு தூரமில்லை, நீ வாராய் !என்று பாடுகிறான் !

 

திருச்சி உலோகநாதனின் கவர்ச்சிக் குரலில் ஒலிக்கும் இப்பாடல்  72 ஆண்டுகளுக்குப் பின்பும் கூட தன் ஈர்ப்புக் குறையாமல் இலங்கி வருவது  இசைக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியன்றோ ?

 

மலை உச்சிக்குச் சென்ற பின், காதலன் அவளை மலையிலிருந்து தள்ளி விட்டுக் கொன்றுவிடப் போவதாகச் சொல்கிறான் ! அதைக் கேட்டுத் துணுக்குற்ற காதலி, ” சாவதற்கு முன்பு, நான் தெய்வமாகக் கருதும் உன்னைச் சுற்றி வந்து வணங்கிய பின் சாக விரும்புகிறேன் என்று சொல்லி, அவனைச் சுற்றி வருகிறாள் !

 

மூன்றாவது சுற்றின் போது அவனையே மலை உச்சியிலிருந்து தள்ளி விடுகிறாள் ! வஞ்சகக் காதலன் மடிந்து போகிறான் !.

 

இந்தக் காட்சி படமாக்கப் பெற்ற சேலம் மாவட்டம் ஏற்காடு மலையின் உச்சிப் பகுதி, “மந்திரிகுமாரிவெளியான பின்பு, மக்களிடையே மிகவும் புகழ்பெற்ற இடமாயிற்று ! இன்றும்கூட  மகளிர் இருக்கை” (LADIES SEAT)  என்னும் பெயரில் இவ்விடம் சுற்றுலா இடமாக மக்களைப் பெருமளவில் ஈர்த்து வருகிறது !

 

ஒரு எளிய திரைப்படத்தின், மூலம் குண்டலகேசி  தமிழ்க் காப்பியத்தின் கதைக்  கருவை  மக்கள் மனதில் நிலைபெறச் செய்துவிட்ட கலைஞர் கருணாநிதியின் திறமைக்கு ஈடு இணைதான் ஏது ?

 

------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ் இலக்கியம்” வலைப்பூ,

திருவள்ளுவராண்டு: 2053, விடை (வைகாசி) 28]

{11-06-2022}

-------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக