தமிழ் இலக்கியங்களைப் பற்றிய ஓர் அறிமுகம் !

விரும்பும் பதிவைத் தேடுக !

திங்கள், 23 மே, 2022

இலக்கிய அறிமுகம் (22) நாலடியார் !

பேய்ச் சுரைக்காயுடன், எதைச் சேர்த்துச் சமைத்தாலும், அதனுடைய கைப்புச் சுவை  போகாது!  ஏன் ?

 -----------------------------------------------------------------------------------


தமிழ் இலக்கியங்களைப் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு எனத் தொகை நூல்களாக வகைப்படுத்தித் தந்துள்ளனர் நம் முன்னோர். இவற்றுள் பத்துப் பாட்டு எட்டுத் தொகை இரண்டும் சேர்ந்து பதினெண் மேற்கணக்குஎன அழைக்கப்படுகிறது. பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களைப் பற்றி இலக்கிய அறிமுகம்என்னும் தலைப்பில் இதுவரைப் பார்த்து வந்தோம் !

 

இனி, பதினெண் கீழ்க் கணக்கு நூல்களைப் பற்றிக் காண்போம். நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணை மொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது, திருக்குறள், திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி, கைந்நிலை ஆகியவையே பதினெண் கீழ்க் கணக்கு நூல்களாம் !

 

இந்நூல்களை நினைவில் வைத்துக் கொள்ள வாய்ப்பாக ஒரு தனிப்பாடலை நமக்கு அளித்துள்ளனர் நம் முன்னோர். அப்பாடல் வருமாறு :-


-----------------------------------------------------------------------------------

 

நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்

பால்கடுகம் கோவை பழமொழிமா மூலம்

இன்னிலைய காஞ்சியுடன் ஏலாதி யென்பவும்

கைந்நிலை யுமாம் கீழ்க்கணக்கு.

 

-----------------------------------------------------------------------------------

 சந்தி பிரித்து எழுதிய பாடல்:-

-----------------------------------------------------------------------------------

 

நாலடி, நான்மணி, நானாற்பது, ஐந்திணை, முப்

பால்,கடுகம், கோவை, பழமொழி, மாமூலம்,

இன்னிலைய காஞ்சியுடன், ஏலாதி, என்பவும்

கைந்நிலையும், ஆம் கீழ்க்கணக்கு

 

----------------------------------------------------------------------------------

 

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் முதலாவதாக வைத்து எண்ணப்படும் நாலடியார், திருக்குறளுக்கு அடுத்த நிலையில் வைத்து போற்றப்பெறும் சிறப்பு வாய்ந்த அறநூலாகும். நான்கு அடி வெண்பாக்களால் இந்நூல் செய்யுட்கள் அமைந்திருத்தலால், இதனை நாலடி  என்றும், “ஆர்என்னும் சிறப்பு விகுதி சேர்த்து நாலடியார்என்றும் வழங்கி வருகின்றனர் !

 

இந்நூலில் உள்ள நானூறு பாடல்களும் பலரால் பாடப்பெற்றவை. சமண முனிவர்களால் பாடப்பெற்றவை இப்பாடல்கள் என்று சொல்லப்படுகிறது. திருக்குறளைப் போலவே இந்நூலும் பத்துப் பத்துப் பாடல்களைக் கொண்ட 40 அதிகாரங்களைக் கொண்டவை. அறத்துப்பால், பொருட்பால், காமத்துப் பால் என்று மூன்று பெரும் பகுதிகளாகவும், ஒவ்வொரு பாற்பகுதியும் பல்வேறு இயல்களாகவும் வகைப் படுத்தப்பெற்றுள்ளன !

 

இரண்டு பாடல்களில் (200, 296) “முத்தரையர்என்னும் அரச பரம்பரையினரைக் குறித்த செய்திகள் காணப்படுவதால், இவ்வரசர்களின் காலம் கி.பி .7- ஆம் நூற்றாண்டுக்குப் பிந்தியது என்பதால், நாலடியார் எழுந்த காலமும் இதை ஒட்டியதே எனக் கருதப்படுகிறது !

 

செல்வத்தின் நிலையாமையைப் பற்றிச் சொல்கையில்,

------------------------------------------------------------------------------------

 

துகள்தீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப்

பகடு நடந்தகூழ் பல்லாரோடு உண்க

அகடுற யார்மாட்டும் நில்லாது, செல்வம்

சகடக்கால் போல வரும்.

 

-------------------------------------------------------------------------------------

 

பயிர்த் தொழிலால் கிடைக்கும் செல்வத்தைத் தனித்துத் துய்க்காமல் பலரோடும் பகிர்ந்து துய்த்திடுங்கள்; ஏனெனில் செல்வமானது யாரிடத்தும் நிலைத்து நிற்காது ! வண்டியின் சக்கரத்தைப் போல சுழன்று கொண்டே இருக்கும் தன்மையது ! இன்று உன்னிடம் இருக்கும்; நாளை வேறொருவனிடம் சென்று விடும். செல்வம் நிலையானாது என்று கருதி, தன்னலத்துடன் வாழாதே” !

 

மனித குலத்திற்கு எத்தகைய பொன்னான அறிவுரை !

------------------------------------------------------------------------------------

 

கூர்த்துநாய் கௌவிக் கொளக்கண்டும் தம்வாயால்

பேர்த்துநாய் கௌவினார் ஈங்கில்லை; நீர்த்தன்றி

கீழ்மக்கள் கீழாய சொல்லியக்கால் சொல்பவோ

மேன்மக்கள் தம்வாயால் மீட்டு !

 

------------------------------------------------------------------------------------

 

இப்பாடல் சொல்லும் மதியுரையைக் கேளீர் ! தெருவில் நடந்து செல்கிறோம்; நாயொன்று ஓடிவந்து நம்மைக் கடித்துவிடுகிறது. சினம் கொண்டு நாம் அந்த நாயைத் திருப்பிக் கடிப்பதில்லை !

 

அதுபோலவே, அறிவிலிகள் கீழ்மொழிகளால் தாக்குகையில், மேன்மக்கள் அந்த அறிவிலியைப் புன்மொழி கொண்டு திருப்பித் தாக்குவதில்லை. என்னே உயர்ந்த பொன்னுரை !

 

இதோ இன்னொரு நல்லுரை !

------------------------------------------------------------------------------------

 

இடம்பட மெய்ஞ்ஞானம் கற்பினும் என்றும்,

அடங்காதார் என்றும் அடங்கார் தடங்கண்ணாய் !

உப்பொடுநெய் பால்தயிர் காயம் பெய்தடினும்

கைப்பறா பேய்ச்சுரை யின்காய் !

 

-----------------------------------------------------------------------------------

இப்பாடலின் பொருள் :-

-----------------------------------------------------------------------------------

 

கசப்புச் சுவையுடைய பேய்ச் சுரைக்காயுடன், உப்பு, நெய், பால், தயிர், பெருங்காயம் எதைச் சேர்த்துச் சமைத்தாலும், எத்துணை அளவு சேர்த்துச் சமைத்தாலும், அதனுடைய கைப்புச் (கசப்பு) சுவை போகவே போகாது.

 

அதுபோலவே, மனம், மொழி, மெய்யென்னும் மூவகைக் கருவிகளையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு, அடக்கமுடன் வாழும் அறிவு இல்லாதவர்கள், மெய்யறிவு புகட்டும் எத்துணை நூல்களைக் கற்றாலும், அவர்களிடம் அடக்கம் என்பது வாரவே வாராது !

 

அறவழி காட்டும், அரும்பெருங் கருத்துகளை எடுத்துரைக்கும், இவை போன்ற பாடல்கள் நாலடியாரில் ஏராளம் ! ஏராளம் ! வாய்ப்புக் கிடைப்போர் நூலகத்திலாவது நாலடியாரைத் தேடியெடுத்துப் படித்துச் சுவையுங்கள் !

 

அரிய கருத்துப் புதையல்கள் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கின்றன; தேடியெடுத்துப் பயனடைவது நமது ஊக்கத்தைப் பொறுத்து அமைகிறது !

 

----------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ் இலக்கியம்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, விடை (வைகாசி) 09]

{23-09-2022}

-----------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக