தமிழ் இலக்கியங்களைப் பற்றிய ஓர் அறிமுகம் !

விரும்பும் பதிவைத் தேடுக !

வெள்ளி, 1 ஏப்ரல், 2022

இலக்கிய அறிமுகம் (04) சிறுபாணாற்றுப்படை !

ஓய்மானாட்டு (திண்டிவனம்)  மன்னன் நல்லியக் கோடனின் வள்ளன்மையை எடுத்துரைக்கும் நூல் !

 

பத்துப் பாட்டு தொகை நூல்களுள் சிறுபாணாற்றுப் படை, பெரும்பாணாற்றுப் படை ஆகியவையும் அடக்கம்.  இரண்டையும் ஒப்பிடுகையில், சிறுபாணாற்றுப் படை, பாடலின் அடியளவில் சிறியது. ஆகவே இந்நூல் சிறுபாணாற்றுப்படை என்னும் பெயர் பெற்றது !

 

இதனை இயற்றியவர் நல்லூர் நத்தத்தனார் என்னும் பெரும் புலவர். அகவற்பாவினால் இயன்ற இந்நூல் 269 அடிகளை உடையது. பல்மீன் நடுவண் பால்மதி போல, பைங்கண் ஊகம் பாம்பு பிடித்தன்ன போன்ற அழகிய சொற்றொடர்கள் நிறைந்த இந்நூல் படிக்கப் படிக்க இன்பம் தருவது !

 

 இக்காலத்தில், திண்டிம் என்று சொல்லப்படும் ஊரும், அதனைச் சூழ்ந்துள்ள பகுதியும், சங்க காலத்தில் ஓய்மானாடுஎனப் பெயர் பெற்றிருந்தது. இந்நாட்டினை நல்லியக் கோடன்என்னும் மன்னன் ஆண்டு வந்தான் !

 

அவன்பால் சென்று, தன் வறுமை நோயைத் தீர்த்துக் கொண்டு மீண்ட பாணன் (இசைப் புலவன்) ஒருவன், நல்குரவால் நைந்த  மற்றொரு பாணனை அந் நல்லியக் கோடன் பால் ஆற்றுப்படுத்துவதாக (வழிப்படுத்துவதாக) அமைந்த நூல் சிறுபாணாற்றுப்படை. !

 

இதன்கண், இமயமலையில் தன் வெற்றிக் கொடியை நாட்டிய சேர அரசன் செங்குட்டுவன் பெருமையும், பாண்டிய மன்னர்களின் உயர்வும், சோழர்களின் சிறப்பும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது !

 

மயிலுக்குப் போர்வை வழங்கிய பேகன், முல்லைக்குத் தேர் ஈந்த பரம்பு மலைப்  பாரி, இரவலர்க்கு நிலமும் குதிரையும் தந்த திருக்கோவிலூர் காரி, பெருவள்ளல் ஆய் அண்டிரன் ஆகியோரின் வள்ளன்மை விதந்து பாராட்டப்படுகிறது !

 

ஔவைக்கு நெல்லிக் கனி தந்த தகடூர் (தர்மபுரி) அதியமான், நாள்தோறும் வாரி வழங்கிய நள்ளி, கூத்தர்க்கு நிலம் தந்த கொல்லி மலை மன்னன் வல்வில் ஓரி ஆகிய வள்ளல்களின் இயல்புகளும், நல்லியக் கோடனின் கொடை வளமும் பாராட்டப்பட்டுள்ளன !

 

சிறுபாணாற்றுப் படையில் பல் மீன் நடுவண் பால்மதி போல....”, “பைங்கண் ஊகம் பாம்பு பிடித்தன்ன...”, போன்ற அழகிய உவமைகளும், “வடபுல இமயத்து வாங்கு விற் பொறித்த, எழு உறழ் திணி தோள், இயல் தேர்க் குட்டுவன்...போன்ற வரலாற்றுச் செய்திகளும், “இருங்காழ் உலக்கை இருப்பு முகம் தேய்த்த அவைப்பு மாண் அரிசி அமலை வெண் சோறு...” (உலக்கையால் குத்தித் தீற்றிய வெள்ளை நிற அரிசிச் சோறு) போன்ற நடைமுறை வழக்கங்களைத் தெரிவிக்கும் வரிகளும் காணக் கிடக்கின்றன !

 

இத்தகைய சிறப்பு வாய்ந்த சிறுபாணாற்றுப் படையில், ஆங்கிலச் சொற்களுக்கு நேரான அல்லது இணையான அல்லது புனைப் பொருள் தரும் தமிழ்ச் சொற்களைக் கண்டறிய இயலாமல் தடுமாறும் தமிழர்களுக்கு, அருட்கொடை அளிக்கும் உயர்நோக்கு உடையதாக, பாடல் நெடுகிலும் பல அழகிய தமிழ்ச் சொற்கள் பரவிக் கிடக்கின்றன.  அவற்றுள் சிலவற்றை மட்டும் காண்போமா !

------------------------------------------------------------------------------

 

BERTH.........................................= பாயல் (பா.வரி.46)

CART............................................= ஒழுகை (பா.வரி.55)

CENTER......................................= நடுவண் (பா.வரி.219)

DRIVER.......................................= வலவர் (பா.வரி.260)

EAT...............................................= மிசை (பா.வரி.139)

FUND............................................= நிதியம் (பா.வரி.249)

GLITTER.....................................= சொலித்தல் (பா.வரி.236)

HAND MADE..............................= கைபுனை (பா.வரி.53)

KITCHEN....................................= அட்டில் (பா.வரி.132)

MATING......................................= சுணங்கல் (பா.வரி.24)

PANTS..........................................= கலிங்கம் (பா.வரி.85)

PATTERN....................................= சாயல் (பா.வரி.16)

PLANET.......(கிரகம்)..............= கோள்மீன் (பா.வரி.242)

SONS.............................................= மகார் (பா.வரி.56)@

STAR.............................................= மீன் (பா.வரி.219)

WEAVERS...................................= கோடியர் (பா.வரி.125)

THINGS NEEDED FOR LIFE..= நடைப்பரிகாரம்(வரி.104)

 

------------------------------------------------------------------------------

@”BALU & SONS” என்பதை  பாலு & மகார்”  என்று

எழுத வேண்டும்.

------------------------------------------------------------------------------

------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ் இலக்கியம்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, மீனம் (பங்குனி) 18]

(01-04-2022}

------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக